

சென்னை: அண்ணாமலை ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை? என்பதற்கு பாஜக மேலிடத் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக மேலிடத் தேர்தல் பொறுப்பாளர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் மாநிலக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஒவ்வொரு வேட்பாளரின் விருப்பத்தின் அடிப்படையில் மிகக் கவனமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. யார் எந்தத் திறனில், எங்கு பணியாற்ற விரும்புகிறார்கள் என்பது முழுமையாகக் கருத்தில் கொள்ளப்பட்டது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் அர்ப்பணிப்புள்ள ஒரு போர்வீரன். அவர் தன்னை ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள் மட்டும் முடக்கிக்கொள்ள விரும்பவில்லை. மாறாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வெற்றிக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார். அதனால்தான் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.
பாஜகவின் தேர்தல் அறிக்கையின் முதல் வரைவு தயாராகிவிட்டது. அதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் டெல்லி மேலிடத்துடன் கலந்தாலோசித்து, இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். பாஜக வேட்பாளர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலும், மத்தியில் பிரதமர் மோடி வழிகாட்டுதலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்கும். தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள், அந்த மாற்றத்தைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் அண்ணாமலை தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக பாஜகவின் வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல், மெத்தனப் போக்கு மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்துள்ள தமிழகத்தின் ஒவ்வொரு சகோதர சகோதரியின் ஆதரவையும் அவர்கள் பெற்றுள்ளனர். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியா வலிமை, வளர்ச்சி, குறிக்கோளுடன் முன்னேறியுள்ளது. திமுக அரசால் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், ஒரு சாதாரண தொண்டனாகநான் அனைத்து பாஜக மற்றும் பிற கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றுவேன் என அதில் கூறப்பட்டுள்ளது.