

விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்கப் பாயின்ட் பிளாசா.
சென்னை: விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசாவை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார்.
சென்னை விமான நிலையத்தில் டெர்மினல் 1-க்கு முன்பக்கம், தரை தளத்தில் ரூ.22.88 கோடியில் பயணிகள் வசதிக்காக பிக்கப் பாயின்ட் பிளாசா அமைக்கப்பட்டுள்ளது.
இதை மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: இந்த பிக்கப் பிளாசா, பயணிகளின் வசதியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பயணிகளை அழைத்துச் செல்லும் வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், டெர்மினல் முன்பகுதியில் ஏற்படும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் உதவும். டெர்மினல்களுக்கும், பல அடுக்கு வாகன நிறுத்தும் இடங்களுக்கும் இடையே பயணிகள் எளிதாக சென்று வருவதற்காக 15 பேட்டரி வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக பாதுகாப்பு சோதனைக்கு பிந்தைய பகுதியில், நவீன டிராலிகளை வழங்குவதற்கான பணியும் நடக்கிறது. இந்த நவீன டிராலிகள், பயணிகள் தங்களது உடைமைகளுடன், எளிதாக நகர உதவுவதுடன், அவர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
5,000 வாடகை கார்கள்
சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் கூறும்போது, “டெர்மினல் 1-ல் இருந்து வாடகை காருக்காக இதுவரை, சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் சென்று, அதன்பின்பு லிப்டில் ஏறி, மேல் தளங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.
தற்போது டெர்மினல் 1-ல் இருந்து சுமார் 30 மீட்டரிலேயே, பிக்கப் பாயின்ட் பிளாசாவில் டாக்சி வசதி இருப்பதால், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் சுமார் 5,000 எல்லோ போர்டு வாடகை கார்களை, இந்தப் பகுதியில் கையாள முடியும். இதன் மூலம் பயணிகளின் சிரமம் குறைவதுடன், விமான நிலைய வாகன போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்படும். பயணிகளின் சேவையை மேம்படுத்துவதே எங்களுக்கு முக்கிய நோக்கம் ஆகும்” என்றார்.