

கோப்புப் படம்
சென்னை: பள்ளிகளில் ‘ஆரோக்கியமான முதுகெலும்பு – ஆரோக்கியமான மாணவர்கள்’ திட்டத்தை தொடங்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு, இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த சங்கத்தின் மாநில தலைவர் வெ.கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே முதுகு வலி, கழுத்துவலி, உடல் பருமன், பாத அமைப்பு மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக அதிக எடையுள்ள புத்தகப் பைகள், நீண்டநேரம் அமர்ந்து படித்தல், மொபைல் மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் அதிக பயன்பாடு போன்றவை குழந்தைகளின் உடல் வளர்ச்சியை பாதிக்கின்றன.
இதைக்கருத்தில் கொண்டு, ‘ஆரோக்கியமான முதுகெலும்பு - ஆரோக்கியமான மாணவர்கள்’ என்ற திட்டத்தை தமிழக அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாகும். இந்த திட்டம் என்பது வெறும் உடல்நலத்திட்டம் மட்டுமல்ல.
இது, ஆரோக்கியமான, தன்னம்பிக்கையான, ஒழுக்கமிக்க மற்றும் போதை பழக்கங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஒரு சமூக முதலீடாக அமையும்.
எனவே, தமிழக அரசு, கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடல்நிலை பரிசோதனை
இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தோள்பட்டை முன்சாய்வு, முதுகுத்தண்டு வளைவு, பாத வளைவு குறைபாடு, உடல் பருமனால் ஏற்படும் இயக்க பிரச்சினைகள் மற்றும் கழுத்து மற்றும் முதுகுவலி பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பிசியோதெரபி வழிகாட்டுதல் மற்றும் தேவையான பயிற்சிகள், சிகிச்சைகள் மூலம் சரிசெய்ய முடியும்.
அதிக எடையுள்ள புத்தகப் பைகள் குழந்தைகளின் முதுகெலும்பு வளர்ச்சியை பாதிக்கும் அபாயம் உள்ளது. அதனால், தேவையற்ற புத்தகங்கள் சுமப்பதை குறைக்க வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் உடல் அமைப்புக்கு ஏற்ற அமர்வு முறை மாணவர்களின் உடல் நலத்துக்கு அவசியமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.