

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரான ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்டம் மைலம் தொகுதி அதிமுக வேட்பாளரான சி.வி.சண்முகம், மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கமணி, கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக, அந்தந்த தொகுதி வாக்காளர்கள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனுக்களில், வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களை மறைத்த விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.