

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் தமிழக அமைச்சர் ரகுபதி மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி ராம.ரவிக்குமார், பரமசிவம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர், காவல் துணை ஆணையர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அமைச்சர் ரகுபதி மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, மனுதாரர்களில் ஒருவரான பரமசிவம் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் சுப்பையா கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை.
இதனால் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் பிப். 2-ல் விசாரணைக்கு வந்த போது மதுரை ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன், செயல் அலுவலர் நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு மன்னிப்பு கோரினர்.
பின்னர் நீதிபதி, காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், செயல் அலுவலர் யக்ஞநாராயணன் ஆகியோர் அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்தும், மார்ச் 2-ல் மாவட்ட ஆட்சியர் பிரவின்குமார் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமைச்சர் ரகுபதியை சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஆனால், அமைச்சர் ரகுபதி திருப்பரங்குன்றம் உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார். அவர் மேலும் கூறும்போது, 144 தடை உத்தரவு பிறப்பிக்காமல் இருந்தால், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகையன்று தீபம் ஏற்றி இருப்பார்கள் என்றும், அப்படி தீபம் ஏற்றி இருந்தால் அதுவே வழக்கமாக மாறிவிடும் என்பதால்தான் தடுத்தோம் என்றும் பேட்டி அளித்துள்ளார்.
இதனால் அமைச்சர் ரகுபதியையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்க கோரியுள்ளோம். அந்த மனுவுக்கு வழக்கு எண் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 2-ல் பிரதான நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரணைக்கு எடுக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.