

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி, ஆட்சியர் கந்தசாமி மற்றும் எஸ்பி அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள், மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியது: தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஈரோடு பெருந்துறை சாலையில் பவளத்தாம்பாளையம் வாரி மகால் அருகே தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்றவுடன் பணிகள் விரைந்து நடத்தப்படும். ரோடு ஷோ தவிர்க்கப்பட்டுள்ளது.
தவெக-வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறதா? என்றால், இதைப்பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். மற்றொரு கட்சியை பற்றி நாங்கள் சொல்ல முடியாது. தவெக தலைவரின் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தவெக-வில் இணைய வாய்ப்புள்ளதா என்பதை 16-ம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள்.
தவெக கூட்டணியில் அமமுக இணையுமா என்றால், ஒவ்வொரு இயக்கங்களும் தன் கொள்கை ரீதியாக பயணம் மேற்கொள்கிறது. அவரவர் நல்ல இயக்கத்தோடு புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற நல்ல மனதோடு தமிழக கட்சி தலைவர் வரும்போது ஒரு மாற்றம் ஏற்படும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளன.
தவெக-வில் நான் இணையும்போது எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. நிபந்தனை விதித்து யாரும் சேர முடியாது மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, வரும் 16-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பவளத்தாம் பாளையத்தில் இடம் பற்றாக்குறையாக இருப்பதால் எஸ்.பி. அலுவலக அதிகாரிகள் அனுமதிமறுத்தனர்.பவளத்தாம்பாளையத்தில் சுமார் 7 ஏக்கர் இடத்தில் 75 ஆயிரம் நபர்கள் வந்து செல்வர் என மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து மாவட்ட எஸ்பி சுஜாதா பவளத்தாம்பாளையத்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கூட்டம் வரும் அளவுக்கு இடம் போதுமானதாக இல்லாததும், பார்க்கிங் வசதி இல்லாததும் தெரியவந்தது. இதனால் இங்கு கூட்டம் நடத்த அனுமதி மறுத்து, மாற்று இடத்தை தேர்வு செய்ய தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினர். இதையடுத்து, செங்கோட்டையன் தலைமையிலான தவெக-வினர் பெருந்துறை அருகே சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை அருகே சரளை என்ற பகுதியில் விஜய் பிரச்சாரத்துக்கு இடம் பார்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.