

பெரம்பலூர்: ரூ.4.71 கோடிக்கு வர்த்தகம் செய்து ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டதாக கூறி ரூ.1.70 கோடி அபராதம் செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளதால் பெரம்பலூர் விவசாயி அதிர்ச்சியடைந்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமம் சிதம்பரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. விவசாயியான இவருக்கு, விருதுநகர் நுண்ணறிவுப் பிரிவு வணிகவரித் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து விரைவு தபால் வந்துள்ளது. அதில், ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி, இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் அப்துல் ராசிக்கிடம் இது தொடர்பாக மனு அளித்தார். அதில் அவர், ‘விருதுநகர் மாவட்டம் ஸ்ரீரங்கபாளையம் முகவரியில் செயல்படும் ஒரு நிறுவனம், எனது ஆதார் எண், வங்கி ஆவணங்களை பயன்படுத்தி ஜிஎஸ்டி பதிவு எண் பெற்றுள்ளது.
அந்த ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.4.71 கோடிக்கு வர்த்தகம் செய்ததாகவும், போலி ரசீதுகள் மூலம் உள்ளீட்டு வரி வரவு மோசடியில் ஈடுபட்டதாகவும் வணிகவரித் துறை குற்றம்சாட்டி, ரூ.1.70 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆண்டு வருமானமே ரூ.75 ஆயிரத்துக்குள் இருக்கும் எனக்கு இவ்வளவு பெரிய தொகைக்கு அபராத நோட்டீஸ் வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்த நிறுவனத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை பெற்ற ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.