

பழநி: தேர்தல்கால வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பழநியை தனி மாவட்டமாக அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த 1985-ம் ஆண்டு செப்.15-ம் தேதி மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்ததுதான் திண்டுக்கல் மாவட்டம்.
திண்டுக்கல்லில் 7 சட்டப்பேரவைத் தொகுதி, ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 14 ஒன்றியம், 23 பேரூராட்சி, 306 ஊராட்சிகளை உள்ளடக்கியது. இதில், ஆன்மிக தலமான பழநிக்கும், கொடைக்கானலுக்கும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இதே போல், தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டும் ஒன்று. இங்கிருந்து நாள்தோறும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும், கேரளாவுக்கும் லாரிகளில் அதிக அளவில் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.
நகராட்சிகளான ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் விவசாயம்தான் பிரதான தொழில். ஒட்டன்சத்திரத்தில் காய்கறி மார்க்கெட்டையும், பழநி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாத் தொழிலையும் பலர் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய முன்னாள் முதல்வர் பழனிசாமி, பழநி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதே போல், தற்போதைய பழநி எம்எல்ஏ செந்தில்குமாரும், திமுக ஆட்சிக்கு வந்ததும் பழநி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என உறுதி அளித்தார்.
பழநி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை மட்டும் அதிமுக, திமுக என இரு கட்சியினரும் மாறி மாறி அளித்தனர். அடிப்படை வசதிகள், பிரச்சினைகளுக்கு தீர்வுகாண, பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி உட்பட அனைத்து துறை மாவட்ட அதிகாரிகளை சந்தித்து வர ஒருநாள் பணியை விடுத்து, பல மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது.
அதே சமயம், பழநியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைந்தால் பழநியை சுற்றியுள்ள ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், மடத்துக்
குளம், உடுமலை தொகுதி மக்கள் சுலபமாக வந்து செல்ல முடியும்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி அலுவலகம் மட்டும் கட்டினால் போதும். மற்ற அனைத்துத் துறை அலுவலகங்களும் பழநியில் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகிறது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு 3 மாதமே உள்ள நிலையில், இன்று (ஜன.7) திண்டுக்கல் மாவட்டத்துக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பழநியை தனி மாவட்டமாக அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.