

மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்றும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஒவ்வொரு தொகுதியாக சென்று பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டில், மேட்டூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மேச்சேரி அருகே காரப்பட்டி பள்ளம் பகுதியில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொங்கல் திருவிழா இன்று (15-ம் தேதி) நடந்தது.
இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு, காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டியில் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், 108 பானைகள் கொண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஒயிலாட்டம், பொம்மலாட்டம், வள்ளி கும்மி கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: இந்த ஆண்டு நடக்கப்போகிற சட்டபேரவை தேர்தலில் நிச்சயம் வழி பிறக்கும். தமிழகத்தில் 60% பேர் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். இளைஞர்கள், மாணவர்கள் பள்ளி கல்லூரிகளில் தைத் திருநாளை மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்குப் பிறகும், அதிமுக ஆட்சிக்காலத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம்.
அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் அதிமுக காலம். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எங்கள் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, இன்னும் சில கட்சிகள் சேரப்போகின்றன. இது வெற்றிக் கூட்டணி, நம் கூட்டணி வரும் தேர்தலில் ஆட்சியமைக்கும், அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
அதிமுக உழைப்பாளர்கள் நிறைந்த கட்சி, தொண்டர்கள் நிறைந்த கட்சி. பாஜக 3-வது முறையாக நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வலிமையான ஆட்சி மத்தியில் நடக்கிறது. உலகம் முழுவதும் பாராட்டப்படக்கூடிய பிரதமராக மோடி இருக்கிறார். இந்தியா பல மாநிலங்கள் கொண்ட நாடு. நாடு வளமாக சிறப்பாக இருக்க மத்தியில் இருக்கிற ஆட்சி துணை நிற்கின்றது.
பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி நம்மோடு இணைந்திருக்கிறார். மக்கள் எப்போது தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். திறமையற்ற முதல்வர் இருக்கிற காரணத்தினால் மக்கள் நிம்மதியாக இல்லை. அரசு பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோரின் போராட்டங்கள் இல்லாத நாளே இல்லை. ஒட்டு மொத்த மக்களும் புறக்கணிக்கிற நிலை வந்துவிட்டது. அடுத்த தை திருநாளில் ஆளும் கட்சியாக இருந்து பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்.
விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் அதிமுக ஆட்சியில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டது, விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தோம், இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு முறையாக கடன் கிடைப்பதில்லை. நமது ஆட்சியில் வறட்சி நிவாரணம் கொடுத்தோம், இழப்பீடு தொகை கொடுத்தோம்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கிராமம் முதல் நகரம் வரை போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. பல்வேறு கொடுமைகள் நடக்கின்றன. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க காரணம், சட்டம் ஒழுங்கு டிஜிபி இதுவரை நியமிக்கப்படாததுதான்.
பொறுப்பு டிஜிபியை நியமித்தார்கள், அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றதால், இன்னொரு பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்க முடியாத அவல ஆட்சி நடக்கிறது. இப்படி இருந்தால் எப்படி சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும்? இந்த ஆட்சியில் எப்படி மக்களுக்கு நன்மை கிடைக்கும்?
அதிமுக தலைமையில் பலம் பொருந்திய கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. திமுக கூடடணியில் அங்கம் வகிக்கிற காங்கிரஸ் கை நழுவி போகப்போகிறது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா என்ற கேள்வி வந்துவிட்டது, அதிமுகவை பொறுத்தவரை பலம் வாய்ந்த கூட்டணி. தேர்தல் நேரத்தில் திமுகவை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது.
வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கிறதா வெளியேறுகிறதா என தெரியவில்லை. ஓய்வூதிய திட்டம் ஒரு நாடகம். மத்திய அரசு அளித்துள்ள இந்த திட்டத்தை பூசி நாடகமாடி இருக்கிறார்கள். முதல்வர் அரங்கேற்றியுள்ள இத்திட்டம் மத்திய அரசின் திட்டமாகும்.
தமிழக அரசு சில மாற்றங்களை செய்து புதியதாக அறிவித்திருக்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல அறிவிக்கப்படவில்லை. சில சங்கங்கள் மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. எங்களை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.