

சென்னை: ‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் நாளிலேயே ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை, 116 பேருக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வழங்கியது.
மத்திய அரசு ‘பிரயாஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வு பெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
அதன்படி, ஜூன் மாதத்தில் பணி மூப்பு காரணமாக, ஓய்வு பெற்ற 116 ஊழியர்களுக்கு ஓய்வூதிய வழங்கல் ஆணைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) சென்னை மண்டலம் வழங்கி சிறப்பித்தது.
ராயப்பேட்டை மண்டல அலுவலக வளாகத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய வழங்கல் ஆணைகளை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா வழங்கினார்.
நிகழ்ச்சியில், உதவி ஆணையர்கள் டி.கோவிந்தராஜன், பிபின்குமார், எஸ்.சதீஷ், கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்) ஏ.பிரகாஷ், மேற்பார்வையாளர் கே.ஆனந்தி, அமலாக்க அதிகாரி சு.செந்தில்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.