

சென்னை: ஓய்வூதியக் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகிய 3 விதமான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு குழு அமைத்தது.
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து அவர்களது கருத்துகள், ஆலோசனைகளைப் பெற்ற இந்த குழு, கடந்த செப்.30-ம் தேதி இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கையை டிசம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்க குழுவுக்கு கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்ட கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஜன.6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில், ககன்தீப் சிங் பேடி குழுவின் இடைக்கால அறிக்கை பரிந்துரைகள் தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் பல சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.