

சென்னை: ‘சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே புதிய தலைமைச் செயலகத்தை அமைக்கும் முடிவால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நீதிமன்றப் போராட்டங்கள் மற்றும் மெரினா கடற்கரையின் பாரம்பரிய மீனவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகியவற்றுக்கு தவெக அரசே பொறுப்பு’ என தமிழக பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே தமிழக சட்டப்பேரவையையும், தலைமைச் செயலகத்தையும் அமைக்கும் தவெக அரசின் முதல்வர் விஜய்யின் முடிவு, ஆளுமையின் வெளிப்பாடு அல்ல. அகம்பாவத்தின், ஆணவத்தின் வெளிப்பாடு.
இது வெறும் வீட்டுவசதி வாரிய நிலம் அல்ல, இது மீனவ மக்களின் உயிர்நாடி. நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான குடும்பங்கள், லூப் சாலை, திசை திருப்பப்பட்ட போக்குவரத்து, சுற்றுப்புற சூழல் கட்டுப்பாடுகளினால் ஏற்பட்டுள்ள சங்கடங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் ‘ஆக்கிரமிப்பு’ நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஏற்கெனவே தங்கள் நிலத்தை இழந்துள்ளனர். இப்போது இந்த அரசு அதே மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு உயர் பாதுகாப்பு அதிகார வளாகத்தை அமைத்து மேலும் தொல்லை அளிக்க விரும்புகிறது.
அதன் விளைவாக, பாதுகாப்பு வளையங்கள், மீனவர்களின் அன்றாட கடற்கரை பயன்பாடுகள் மற்றும் சிறு படகு மீன்பிடி தொழிலின் அழிவு ஆகியவை ஏற்படும். 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அதாவது குறைந்தது 10,000 மக்கள் தங்களின் இருப்பிடங்களை இழக்கும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. மெரினா கடற்கரையிலிருந்து நம் மீனவ சமுதாயத்தினரை விரட்டியடிக்காமல், அவர்களின் உரிமைகளை பறிக்காமல் 25 ஏக்கர் நிலத்தைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத ஒரு அரசுக்கு, "100 ஆண்டு தலைமைச் செயலகம்" பற்றிப் பேச எந்த தார்மிக உரிமையும் இல்லை.
அரசின் இந்த அறிவிப்பானது பொதுமக்களின் மீதான மோசடியாகும். சட்டமன்ற அறிவிப்பு, அவசர அவசரமாக எடுக்கப்பட்ட அரசாணை, மற்றும் தமிழ் நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சியிடமிருந்து பெறப்பட்ட "ஒப்புதல்" குறிப்புகள் ஆகியவை உரியவர்களின் பொருளை யாருக்கும் தெரியாமல் விற்பதற்கு ஒப்பானது. கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி இன்னும் பெறப்படவில்லை. முழுமையான சுற்றுச்சூழல் அனுமதியும் கைவசம் இல்லை.
அந்தக் கடற்கரையில் உழைக்கும் மக்களின் வாழ்வாதார பாதிப்பு குறித்து எந்த விளக்கமும் இல்லை. குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வெளியேற்றம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த நிலம் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்றும், அது திருப்பித் தரப்பட வேண்டும் என்றும் மீனவ சமூகங்கள் கூறுகின்றன. அரசு முதலில் ஒரு இடத்தை முடக்கிவிட்டு, பின்னர் அதன் சட்டப்பூர்வத்தன்மையைத் தேடுகிறது. இப்படித்தான் கடலோர மக்களும் நசுக்கப்படுகிறார்கள்.
சாந்தோம் நெடுஞ்சாலை, கிரீன்வேஸ் சாலை மற்றும் பட்டினப்பாக்கம் சிக்னல் ஆகியவை ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களாக உள்ளன. மெட்ரோ பணிகள் மேற்கண்ட இடங்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. பழைய சாலைகள் பழுதடைந்ததால் லூப் ரோடு மேம்படுத்தப்பட்டது. அதுவே இப்போது பேருந்துகள், கடற்கரைக் கூட்டங்கள், பள்ளிகள், சாந்தோம் தேவாலயம் மற்றும் பதிவுத் துறை அலுவலகம் ஆகியவற்றால் நிரம்பி வழிகிறது.
இந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் குறைந்தது 30,000 குழந்தைகளும், தினமும் அலுவலகங்களுக்கு அவசரமாகச் செல்லும் தங்கள் பிள்ளைகளை இங்கு விட்டுச்செல்லும் பெற்றோர்களும் தலைமைச் செயலகம் இங்கு வந்தால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். அரசின் முழு தலைமையகத்தையும் இந்த இடத்தில் கொண்டு வருவது ஒட்டுமொத்த தென் சென்னையையே முடக்கிவிடும், மேலும் உலகின் அழகிய கடற்கரைச் சாலையை விஐபி க்களின் இருப்பிடமாக மாறிவிடும். தலைமை செயலகத்திற்கான இந்த இடத் தேர்வு அனைத்து விதமான பார்வைகளிலும் தோல்வியடைகிறது.
இது கடல் அலைகளின் சீற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படக்கூடிய கடற்கரை நிலப்பகுதியாகும். ஒரு தலைமை செயலகத்திற்கு தேவையான தீயணைப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து வசதிகள், பசுமைப் பரப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகள் ஆகியவற்றை இருபத்தைந்து ஏக்கர் நிலத்தில் அமைக்க முடியாது. ரூ.1,200 கோடி செலவில், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய இந்தக் கடற்கரைப் பகுதியில், மீனவக் குடியிருப்புகளுக்கு அருகிலேயே இத்திட்டத்தைச் செயல்படுத்த முனைவது அரசுக்கு மிகப்பெரும் தோல்வியை உருவாக்கும் செயலாகும்.
சென்னை மக்கள் இந்த யோசனையை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர். இக்கிராமங்களை இடமாற்றம் செய்யவும், இங்கு தலைமைச் செயலகம் மற்றும் தூதரகங்களுக்கான திட்டங்களை கொண்டுவரவும், இப்பகுதி வழியாகத் துறைமுகச் சாலைகளை அமைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. ஏனெனில், இந்தக் கடற்கரை வெறும் புகைப்படப் பின்னணியோ, படப்பிடிப்புக்கான இடமோ அல்ல. நவீன நகரம் உருவாவதற்கு முன்பிருந்தே, பல நூற்றாண்டுகளாக மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்; எனவே, ஒரு அரசாணை வெளியிடுவதன் மூலம் மட்டும் அரசுக்கு அந்த நிலத்தின் மீதான உரிமை கிடைத்து விடாது.
நவீன சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைப்பதை பாஜக எதிர்க்கவில்லை; தமிழகத்திற்கு அத்தகைய கட்டமைப்பு தேவைதான். ஆனால், இந்த இடம், இந்த அவசரம் மற்றும் கடற்கரை வாழ் தமிழர்கள் மீதான உங்களின் அலட்சியப் போக்கு ஆகியவற்றை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த அரசாணையைத் திரும்பப் பெறுங்கள். கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் போக்குவரத்து ஆய்வுகள் குறித்த விவரங்களை வெளியிடுங்கள்.
ஒரு சுவர் அமைப்பதற்கு முன்பாக மீனவக் கிராம மக்களின் கருத்துகளைக் கேளுங்கள். இதனால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மீது அக்கறை கொள்ளுங்கள். கடலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களிடமிருந்து கடலை அபகரிக்காத வகையிலான நிலத்தைத் தேர்ந்தெடுங்கள்.
இந்த அரசு இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தினால், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நீதிமன்றப் போராட்டங்கள் மற்றும் மெரினா கடற்கரையின் பாரம்பரிய மீனவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகியவற்றுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். பாஜக அம்மக்களின் பக்கம் உறுதியாக நிற்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.