‘முற்போக்கு சிந்தனையாளர் சாலமன் பாப்பையா...’ - இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் புகழஞ்சலி

‘முற்போக்கு சிந்தனையாளர் சாலமன் பாப்பையா...’ - இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் புகழஞ்சலி
Updated on
2 min read

சென்னை: பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘சாலமன் பாப்பையா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். தனது தமிழ்ப் புலமையாலும், நகைச்சுவையினாலும் தமிழ்ப் பட்டிமன்றத்தை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்தவர்.

இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர். பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியவர். தமிழ் இலக்கியத்திற்கும், கலைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு பத்மஸ்ரீ, கலைமாமணி ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

தனது இளம் வயதில் இளமாறன் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் பேசியவர். 2025-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டின் போது நடைபெற்ற கலைவிழாவில் பங்கேற்று பேசியவர். ஆசிரியர் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், முற்போக்கு சிந்தனையாளர். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்ற கலைக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘சிறந்த தமிழறிஞரும், தமிழ்நாடு நன்கறிந்த பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (செப்டம்பர் 11) காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தையும், வருத்தத்தையும் தருகிறது.

சாலமன் பாப்பையா, பிப்ரவரி 22, 1936 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள சாத்தான்குடியில் பிறந்தார். சாலமன் பாப்பையா, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தனது நகைச்சுவை ததும்பும் எளிய சொற்பொழிவால், வாதத் திறமையால், இனிய குரல் வளத்தால் தலைமுறைகளைத் தாண்டி அனைத்து பிரிவு மக்களையும் கவர்ந்தவர்.

திருக்குறள் மற்றும் பல பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளார்.முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’, ‘பத்ம ஸ்ரீ’ உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நினைவில் வாழும் மூத்த தலைவர்களான இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோருடன் மிகுந்த நட்பு பாராட்டியவர். தா.பாண்டியன், சாலமன் பாப்பையா அவர்களுடன் பல பட்டிமன்றங்களிலும் பங்கேற்று உரையாற்றி உள்ளார்.

சாலமன் பாப்பையா சிறந்த முற்போக்கு சிந்தனையாளர் ஆவார். அவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்களின் இலக்கியச் செழுமையை அவர் தனது நூல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ’என குறிப்பிட்டுள்ளார்

சாலமன் பாப்பையா மறைவு: மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலகுறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

மாநகராட்சி பள்ளியில் படித்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். மதுரை ஞானஒளிவு புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இனிய தமிழில் எல்லோரையும் கவரும் வகையில் நகைச்சுவையாக பேசுவதில் அவர் திறமை வாய்ந்தவராக இருந்தார்.

சமூகத்திலும, ஒவ்வொருவரது வீடுகளிலும் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை சுவாரசியமாக நடத்துவதில் வல்லவர். பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, கடல் கடந்தும் தமிழ் மொழியை வளர்த்தவர்.

பேச்சாற்றலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சாலமன் பாப்பையா, சில திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். இந்திய அரசின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது 2021-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. நெஞ்சு வலி காரணத்தால் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

‘முற்போக்கு சிந்தனையாளர் சாலமன் பாப்பையா...’ - இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் புகழஞ்சலி
“பட்டிமன்றங்களை அறிவுத் தளங்களாக மாற்றியவர்” - சாலமன் பாப்பையாவுக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in