

மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில், ஐந்துமுனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றும் மற்றும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்கள் உள்பட பல்வேறு தகவல்களை தேர்தல் நிர்வாகம் வெளியிடாமல் உள்ளது. இதனால் தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் தேர்தல் அலுவலர்களின் கவனத்துக்கு வருகிறதா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பல்வேறு கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவில், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69 ஆயிரத்து 298 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் 62 ஆயிரத்து 090 வாக்குகள் பெற்று இராண்டாம் பிடித்தார்.
பின்னர், மரகதகம் குமரவேல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்தார். இதையடுத்து இங்கு அக்-6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக, அதிமுக, தவெக, நாதக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என ஐந்துமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
ஆனால், மாவட்ட தேர்தல் நிர்வாகம் மற்றும் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் தரப்பில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் புகார்கள் தொடர்பாக வெளிப்படையாக தகவல் தெரிவிக்க மறுக்கப்பட்டு வருகிறது. இதில், வேட்பாளர்களின் எண்ணிக்கை, வேட்புமனுத்தாக்கல் முதல் ரொக்கம் பறிமுதல் வரையில் என எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கபட்டுள்ள நரேந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலமும் எந்த வொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவில்லை. இதனால், தொகுதியில் நடக்கும் பிரச்சினைகள், விதிமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் அலுவலரின் கவனத் துக்கு வருகிறதா என கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதனால், தேர்தல் பணிகள் வெளிப்படையாக உள்ள என தெரியாத நிலை உள்ளது.