

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை.
தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சுயேச்சைகள் உட்பட 13 பேர் களத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுவதால் தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கும் முக்கியத் தொகுதியாக மாறியுள்ளது. இந்தத் தொகுதியில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் - கு.செல்வப்பெருந்தகை
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். தமிழக அரசின் நலத்திட்டங்கள், குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் திட்டங்களை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண புதிய மேம்பாலங்கள் மற்றும் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்யும் அதிமுக வேட்பாளர் பழனி.
அதிமுக - பழனி
அதிமுக சார்பில் பழனி களம் காண்கிறார். திமுக அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், மற்றும் மத்திய - மாநில அரசுகளின் கடந்த கால சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்கிறார். தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை, குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என உறுதி கூறி வருகிறார்.
பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிந்து.
நாம் தமிழர் கட்சி - சிந்து
நாதக சார்பில் சிந்து போட்டியிடுகிறார். மண் வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும், இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும் என உறுதியளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
தமிழக வெற்றிக்கழகம் - தென்னரசு
தவெக சார்பில் களமிறங்கியுள்ள தென்னரசு, புதிய தலைமுறை அரசியலை விரும்புவோரை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தொகுதியில் உயர் தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் அமைத்தல் மற்றும் சிறு குறுதொழில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளிக்கிறார்.
கடை வீதிகளில் இளைஞர் பட்டாளத்துடன் சென்று வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளர் தென்னரசு.
நட்சத்திரத் தொகுதியாக விளங்கும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளதால், வெற்றிக் கனியை பறிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.