வெங்கய்ய நாயுடு | கோப்புப் படம்
சென்னை: இலவசங்களை அறிவிப்பவர்கள் அதற்கான நிதி குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வெங்கய்ய நாயுடு, மக்களும் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஒரு மனிதனுக்கு மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றக்கொடுக்க வேண்டும் என்ற ஒரு பழமொழி உண்டு. தொடர்ந்து இலவசங்களை கொடுத்துக்கொண்டே இருந்தால் மக்கள் மேலும் பலவற்றை எதிர்பார்க்கத் தொடங்குவார்கள். இதைத்தான் நான் நிகழ்ச்சியில் பேசும்போதும் தெரிவித்தேன். நான் எந்த ஒரு மாநிலத்தையும் குறிப்பிடவில்லை. இது நாடு முழுவதுமே நடக்கிறது.
இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அரசும் மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசால் வழங்க முடியும் என்றால் இலவசங்களைக் கொடுக்கலாம். அதேநேரத்தில், இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளை அளிப்பது அது எந்த கட்சியாக இருந்தாலும், எந்த மாநிலமாக இருந்தாலும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த திட்டத்துடன் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கை இல்லாமல், மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த புரிதல் இல்லாமல் இன்னும் இன்னும் இலவசங்கள் அறிவிக்கப்படுமானால் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் அதனிடம் கேள்வி கேட்க வேண்டும்.
இலவசங்கள் அறிவிக்கிறீர்களே, அதற்கான நிதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வாறு பட்ஜெட்டை திட்டமிடப் போகிறீர்கள்? எவ்வாறு நிதி திரட்டப் போகிறீர்கள்? என்ற கேள்விகளை மக்கள் கேட்க வேண்டும். இந்த விஷயத்தை நான் மிகவும் வலியுறுத்த விரும்புகிறேன்” என தெரிவித்தார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற அமர்வு கூட இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெங்கைய்யா நாயுடு, “பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டிருப்பதை நான் உறுதியாக வரவேற்கிறேன். ஏனெனில் இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒரு திட்டம். மக்கள் தொகையில் பெண்கள் 50 சதவீதத்தை வகிக்கின்றனர். அவர்கள் சமூகத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகத் திகழ்வதோடு, நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டியவர்கள் என்பதால், அவர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் எவ்விதச் சிக்கலும் இருக்கக்கூடாது.
இது ஒன்றும் புதிய சிந்தனை அல்ல; இது குறித்து முன்னரே விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டும் உள்ளது. எனவே, தற்போது இம்சோதா முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய, அவையின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது” என தெரிவித்தார்.