

கோப்புப் படம்
சென்னை: டிஆர்பி சிறப்பு ஆசிரியர் தேர்வில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 அரை நாட்கள் பணியாற்றும் அவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் கோரி அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
சமீபத்தில் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தியபோது, ‘தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். கோடைவிடுமுறையான மே மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சிறப்பு ஆசிரியர் பணி நியமனத்துக்கு தேர்வு நடத்தும்போது, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணிக் காலத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட போனஸ் மதிப்பெண் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். எனினும், இதுதொடர்பாக இதுவரை அரசாணை வெளியிடப்பட வில்லை.
கடைசியாக 2017-ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர் நேரடி நியமனத்துக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 1,300 பேர் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு 8 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு ஆசிரியர் தேர்வில் எழுத்து தேர்வுக்கு 95 மதிப்பெண், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு (சீனியாரிட்டி) 5 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
எழுத்து தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் போது, இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி நியமனம் நடைபெறுகிறது.
இந்நிலையில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு, பணிக் காலத்துக்கு ஏற்ப டிஆர்பி தேர்வில் போனஸ் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. போனஸ் மதிப்பெண், எழுத்து தேர்வு மற்றும் வேலை வாய்ப்பு பதிவு மூப்புக்கான மதிப்பெண், கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வு உள்ளிட்ட விவரங்கள் அந்த அரசாணையில் இடம்பெறும்.
பள்ளிக்கல்வித் துறை அரசாணையை வெளியிட்ட பிறகு உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்தேர்வுக்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிடும். சுமார் 1,600 சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த அரசாணை எப்போது வெளியாகும் என பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.