

போராட்டக் களத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் | கோப்புப் படம்
சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.12,500-ல் இருந்து ரூ.15000 ஆக உயர்த்தப்படுவதாகவும், மே மாதத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களில் உடற்கல்வி 3700 பேர், ஓவியம் 3700 பேர், கணினி அறிவியல் 2 ஆயிரம் பேர், தையல் 1700 பேர், இசை 300, தோட்டக்கலை 20, கட்டிடக்கலை 60, வாழ்க்கைக்கல்வி 200 பேர் பணிபுரிகின்றார்கள்.
இவர்கள், போனஸ், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறத்தோர் குடும்பத்திற்கு நிவாரணம், ஓய்வூதியம் உள்பட அரசின் சலுகைகள் இல்லாமல் பணிபுரிகின்ற தற்காலிக வேலையை நிரந்தரமாக்கவும், தற்போதைய ரூபாய் 12,500 தொகுப்பூதியத்தை மாற்றி காலமுறை சம்பளமாக வழங்க வலியுறுத்தியும் ஜனவரி 8-ம் தேதி முதல் போராட்டத்தை சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நடத்தி வருகின்றார்கள்.
போராட்டக் களத்தில், திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் ஓங்கி முழங்கி வந்தனர்.
“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி, பொங்கல் போனஸ், பொங்கல் பரிசி வழங்க ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் சுமார் ரூ.300 கோடி நிதி ஒதுக்கி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இதை அரசு கொள்கை முடிவாக திமுக தேர்தல் வாக்குறுதி 181-ஐ அரசாணையிட்டு பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, பொங்கல் போனஸ் வழங்கி முதல்வர் இதனை பொங்கல் பண்டிகை பரிசாக அறிவிக்க வேண்டும்.” என்று போராடிய ஆசிரியர்கள் கோரினர்.
இந்நிலையில், இன்று (ஜன.14) காலை, அமைச்சர் அன்பில் மகேஸ் பகுடிநேர ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ”முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
எஸ்எஸ்ஏ திட்டத்தில் ரூ.3,548 கோடி மத்திய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது. அனால் மத்திய அரசு அதைத் தொடர்ந்து தர மறுக்கிறது. எனினும் ஆசிரியர்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் உறுதுணையாக அரசு இந்த செலவினங்களை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகிறது.
தற்போது ஆசிரியர்களின் போராட்டம் எனக்கு கனத்த இதயத்தைத் தருகிறது என்று முதல்வரிடம் கூறினேன். பொங்கல் பண்டிகை நாளில் மகிழ்ச்சி என்பது வார்த்தையில் மட்டும் இல்லாமல் அவர்களுக்கு உண்மையாகவே மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்று விரும்பி அவர்களுக்கான ஊதியம் மேலும் ரூ.2500 உயர்த்தப்படுகிறது.
அதன்படி பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. மேலும் மே மாதத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் இனி மே மாதத்தில் ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தின் ஊடே இத்தனை காலத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு அரசு ஏதேனும் நிவாரணம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். அது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளேன். மருத்துவக் காப்பீடு தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல், பணி நிரந்தரம் என்பது அவர்களின் பிரதான கோரிக்கை. அது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.” என்றார்.