

சென்னை எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் சாலை அருகே நேற்று 5-வது நாளாக ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ம. பிரபு
சென்னை: அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கும் வரை பொங்கல் வந்தாலும் சரி, புயல் வந்தாலும் சரி போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என சென்னையில் நடந்த 5-ம் நாள் போராட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் தங்களையும் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த 4 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.
இதன் தொடர்ச்சியாக 5-வது நாளான நேற்று சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையில், எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் சாலையில் போராட்டம் நடை பெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காலமுறை ஊதியம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி செயலாளர்களை, தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடும் வரை எங்களின் போராட்டம் தொடரும். இதுவரை 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அரசு தரப்பில் காலஅவகாசம் கேட்கப்படுகிறது. ஏற்கெனவே 2018 முதல் அரசுக்கு காலஅவகாசம் வழங்கிவிட்டோம். 8 ஆண்டுகள் கடந்தும் எந்த காலஅவகாசத்தை அரசு எதிர்பார்க்கிறது?
அடுத்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரம் பேர் ஓய்வு பெறவுள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியத்தை அரசாங்கம்தானே தர வேண்டும். நாளை (இன்று) மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் வந்தாலும் சரி, புயல் வந்தாலும் சரி, ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில் 1,150-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர். போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், போலீஸார் அறிவுறுத்தியும் கலைந்து செல்லாததால், அனைவரும் கைது செய்யப்பட்டு, அமைந்தகரை, செனாய் நகர் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.