கோவை விமான நிலையத்தில் நேற்று பிரதமரை வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார். உடன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.
கோவை: கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடியிடம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கோரிக்கை மனு வழங்கினார்.
கோவையில் நேற்று நடந்த தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற பழனிசாமி, பின்னர் பிரதமரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இயற்கை விவசாயத்தில் விளைச்சல் குறைவாக உள்ள நிலையில், விவசாயிகளுக்கு மண் புழுக்கள், நுண்ணுயிரிகள், இயற்கை உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.
கோவையில் தேங்காய், தக்காளி, ஈரோட்டில் மஞ்சள், தருமபுரி, கிருஷ்ணகிரியில் மாம்பழம், டெல்டா மாவட்டங்களில் நெல், திருச்சியில் வாழை, கரும்பு என பரவலாக சாகுபடி செய்யப்படும் பயிர்களை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இந்தப் பயிர்களுக்கு தனி மானியத் திட்டங்களை அறிவிப்பதுடன், இயற்கை வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய அரசு நேரடி சந்தையை அமைக்க வேண்டும்.
கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும். டிராக்டர், விவசாயக் கருவிகளுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல, விவசாய, வீட்டுப் பயன்பாட்டுக்கான மோட்டார் பம்புகள்மீதான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
பிரதமரை வரவேற்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை. உடன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்.
எம்எஸ்எம்இ துறையில் இன்ஜினீயரிங் ஜாப்-ஒர்க் பணிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், சிறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் மறுசுழற்சி பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.
கோவை-ராமேசுவரம் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். மென்பொருள் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் சேவையை ஏற்படுத்த வேண்டும்.
அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்ள உதவும் வகையில், ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உப யோக ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்வோருக்கு கடனைத் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு உள்ளிட்ட சலுகைகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பை நூற்பாலை, கைத்தறி, விசைத்தறி தொழில் துறையினருக்கும் விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.