

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் திருத்தணி சட்டப்பேரவை தொகுதி வீரகநல்லூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உரையாற்றினார்.
சென்னை: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்கள் நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பழனிசாமி உறுதி அளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில், திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில், வீரகநல்லூரில் பழனிசாமி பேசியதாவது: நான் எழுச்சி பயணம் மேற்கொண்ட அனைத்து தொகுதிகளிலும் மக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது. அதிமுகவின் வெற்றியை மக்களின் எழுச்சியில் பார்க்க முடிகிறது.
அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். திமுக ஆட்சியில், அவர்கள் குடும்பம் மட்டும் வளமாகியது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, அடுத்து இன்பநிதி. இந்த வாரிசு அரசியல் தேவையா? திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து என்றார்கள். ரகசியம் தெரியும் என்றார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
இப்போது எங்களால் முடியாது என்று சொல்லிவிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதுதான் அந்த ரகசியம். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று அந்தர்பல்டி அடித்துவிட்டது திமுக. 2021 தேர்தலில், கொடுத்த 525 வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கை கூட திமுக நிறைவேற்றவில்லை.
திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் செவ்வாய்கிழமைகளில் வழிபாடு செய்ய சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த அனுமதி, திமுக ஆட்சியில் மறுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் செவ்வாய்க்கிழமைகளில் தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்படும்.
விசைத்தறி, கைத்தறி நெசவாளர் நிலை சரிந்துபோய் இருக்கிறது. நெசவாளர் நிலை மீண்டும் சிறக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்பியுமான கோ. அரி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.