சேலம்: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (எஸ்ஐஆர்) பணியில் ஆளுங்கட்சி குறுக்கீடு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருகிறது.
இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வுகாண வேண்டும். கோவையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது தொடர்பான தமிழக அரசின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
நகர்ப் பகுதிகளில் மெட்ரோ ரயில் அமைக்க 20 லட்சம் மக்கள்தொகை இருக்க வேண்டும் என்பது அரசின் விதி. 2011-ல் அதிமுக ஆட்சியின்போது மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது 15 லட்சம் பேர்தான் இருந்தார்கள்.
எனவே, 2025-ம் ஆண்டு மக்கள்தொகை விவரங்களை அறிக்கையாகத் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசின் தவறான அணுகுமுறையால் இந்தப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டம்-ஒழுங்கு காவல் பிரிவுக்கு நிரந்தர டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பதால், உயரதிகாரிகள் முறையாகச் செயல்படுவதில்லை.
இதனால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றச் சம்பவங்களில் முறையாக துப்பு துலக்காததால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றாலும், உச்ச நீதிமன்றம் வரை சென்று சிபிஐ விசாரணை கூடாது என்று அரசு மேல்முறையீடு செய்வது ஏன்? குற்றச் சம்பவங்களின் பின்னணியில் முக்கியப் புள்ளிகள் இருப்பதாக கருதுகிறேன்.
எஸ்ஐஆர் பணி மூலம் இரட்டை வாக்காளர்கள், இறந்தவர்கள் மற்றும் இடமாற்றம் செய்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும். தாம்பரம் தொகுதியில் ஒரு பாகத்தில் ஒரே கதவு எண்ணில் 320 வாக்குகளும், மற்றொரு பாகத்தில் ஒரு கதவு எண்ணில் 180 வாக்குகளும் உள்ளதாக வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் பணியில் ஆளுங்கட்சியினரின் தலையீடு உள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையரே ஆளுங்கட்சியினருக்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது. எஸ்ஐஆர் பணியில் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட வைத்தால் மட்டுமே இந்தப் பணிகள் முடிவடையும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
தேர்தல் ஆணையத்தில் மனு: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இன்பதுரை எம்.பி. ஆகியோர் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், “தமிழகத்தில் விதிகளுக்கு உட்பட்டு எஸ்ஐஆர் பணிகளை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.