

திண்டுக்கல்: பழநி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பழநி மடம் நில மோசடி வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், வெள்ளைத்துரை, சேதுபதி, அன்வர்தீன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் 6 பேரை கைது செய்தனர். இதில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரில் அன்வர்தீன் திடீர் உடல்நலக்குறைவால் இறந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய நபரான சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டபோது உடல்நலக் குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான அன்வர்தீன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜஸ்டின் மணிகண்டன் தனி அறையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் சிகிச்சை பெறும் வார்டுக்கு வெளியே இரண்டு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்கள் அடிக்கடி ஜஸ்டின் மணிகண்டனின் உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனர். வழக்கறிஞர் அன்வர்தீன் திடீர் உயிரிழப்பைத் தொடர்ந்து இவருக்கும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.