

தென்காசி: பல்வேறு உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், அரிசி விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை கவலையடையச் செய்துள்ளது என தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் சி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் மற்றும் ஆலங்குளம் வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அரிசி விலை அதிகரித்து வரும் நிலையில், சில அரிசி ஆலைகள் பல்வேறு நெருக்கடிகளால் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அரிசி விலை உயர்வுக்காக காரணங்கள், விலை உயர்வை கட்டுப்படுத்த மேற்கொள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் சி.அன்பழகனிடம் கேட்டபோது அவர் கூறியது: “தமிழகம் மட்டும் நெல் மகசூலில் பற்றாக்குறை மாநிலமாகவே உள்ளது. தேவைக்கேற்ப வெளி மாநிலங்களில் இருந்து நெல் மற்றும் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்கியதால் பெரும்பாலான விவசாயிகள் பெரும்பாலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்கிறார்கள்.
தமிழகத்தின் அதிக நெல் விளைச்சல் தரும் மாவட்டங்களில் மழை அளவு குறைந்ததால் நெல் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆகவே தனியார் அரிசி ஆலைகள் தங்களுடைய தேவைக்கு ஏற்ப வெளி மாநிலங்களில் அதிக விலை கொடுத்து நெல் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் விரும்புகின்ற மிகவும் சன்னரக அரிசியின் தரத்தை மேம்படுத்தி தயாரிப்பதற்காக அதிநவீன இயந்திரங்களை நிறுவ வங்கிகளில் அதிக கடன் பெற்று ஆலைகளை எப்படியாவது இயக்கினால் தான் வங்கியில் பெறப்பட்ட கடன் தொகையை கட்ட முடியும் என்ற நிலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மின் கட்டண உயர்வு ஆண்டுக்கு 6 சதவீதம், மின் நிலுவை கட்டணம் LT இணைப்வுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.35ல் இருந்து ரூ.170 ஆகவும், HT இணைப்புக்கு ரூ.300-ல் இருந்து ரூ.575 வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. பீக் ஹவர்ஸ் மின் கட்டணம் 15 சதவீதம் உயர்ந்துள்ளது.
அரிசி ஆலைகளுக்கு தேவையான தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி செய்து கொடுத்து, ஆலைகளை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அன்றாடம் உழைக்கும் மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 5 கிலோ 10 கிலோ பைகளில் வாங்கும்போது 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் 5, 10 கிலோ அரிசி பைகளின் அடக்க விலை உயர்வு, மின் தட்டுப்பாடு காலங்களில் ஜெனரேட்டர்களுக்கான டீசல் விலை உயர்வு, பணியாளர்கள் கூலி உயர்வு மற்றும் வாகன செலவு உயர்வு போன்ற காரணங்களால் தயாரிப்பு செலவு உயர்ந்துள்ளதும் அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நெல் தட்டுப்பாடு காரணமாகவும், தயாரிப்பு செலவு அதிகரிப்பாலும் கடனுக்கான தவணைத் தொகை கட்ட முடியாமல் 20 முதல் 25 சதவீத நவீன அரிசி அலைகள் இயக்க முடியாத நிலையில் மூடப்பட்டுள்ளன. அரிசி ரகங்களில் சன்ன, மிக சன்ன ரகங்கள் (HMT,RNR, அட்சயா, அம்மன்) மட்டுமே விலை அதிகம் உயர்ந்துள்ளது.
உருட்டு அரசி ரகங்களான ஏடிடி 45, டீலக்ஸ் பொன்னி, பிபிடி பொன்னி மற்றும் இட்லி அரிசி வகைகளில் விலை ஏற்றம் சற்று குறைவாகவே உள்ளது. நெல் வரத்து அதிகரிக்கும்போது விலை குறையும்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பெறக்கூடிய நெல் ஈரப்பதம் மற்றும் சரியான நேரத்துக்கு கொள்முதல் செய்ய தவறியதாலும் தரம் குறைந்து காணப்படும் நெல்லை திறந்த வெளியில் சேமித்து அதன் பிறகு அரசு அரவை முகவர்கள் தங்கள் ஆலைகளுக்கு எடுத்துச் சென்று தயாரித்து வழங்கும்போது தரம் குறைந்துவிடுகிறது. மிகவும் ஏழ்மையில் உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை சாப்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர்.
ரேஷன் வழங்கப்படும் அரிசியை தரமானதாக தயாரித்து வழங்காததால் வெளி மார்க்கெட்டில் அரிசி விலை உயர்வதற்கு காரணமாக உள்ளது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அந்தந்த கொள்முதல் நிலையங்களில் சுத்தப்படுத்தி நேரடியாக அரசு அரவை முகவர்களுக்கு வழங்கினால் அவர்கள் அதை உலர வைத்து தரமான அரிசியாக தயாரித்து தேவையான எடை அளவுகளில் வழங்கும்பட்சத்தில் அனைத்து தரப்பினரும் ரேஷன் அரிசியை பயன்படுத்துவார்கள்.
குடும்ப அட்டைகளை அரசு ஆய்வு செய்து அரிசி வாங்க விருப்பம் இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசியை விருப்பம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் வழங்க அரசு ஆவனம் செய்யலாம். மேலும் விவசாயிகளிடம் இருந்து உற்பத்தியாகும் நெல்மணிகள் சேதாரம் இல்லாமல் தரமாக பாதுகாக்கும் நிலை ஏற்படும். இதனால் அரசுக்கு காலம், போக்குவரத்து வாகனம் மற்றும் பண விரயம் ஏற்படாது” என்றார்.