அரசு ஊழியர்களின் விமர்சன உரிமைக்கு தடை விதிக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெறுக: மார்க்சிஸ்ட்

 பெ.சண்முகம்

பெ.சண்முகம்

Updated on: 
2 min read

சென்னை: “அரசு ஊழியர்களின் விமர்சன உரிமைக்குத் தடை விதிக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும். விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத அம்சமாகும். விமர்சனம் செய்யக் கூடாது என்று மிரட்டுவது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலாகும்” என என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் 2026 அக்டோபர் 23, 24 தேதிகளில் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர்.நினைவகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: பொது சுகாதாரத் துறை இயக்குநரின் வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் 19.10.2026 தேதியிட்டு ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்கள் ஒன்றிய அரசு அல்லது மாநில அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள், திட்டங்களை எந்த வகையிலும் விமர்சிக்கக் கூடாது என்றும், அப்படி விமர்சித்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டிப்பதோடு உடனடியாக இந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டுமென வலியுறுத்துகிறது.

நவீன தாராளமயக் கொள்கைகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் காலத்தில் ஒன்றிய அரசோ, மாநில அரசோ மக்களுக்கு எதிரான திட்டங்களையோ, கொள்கைகளையோ, அறிவிப்புகளையோ வெளியிடும்போது அவற்றிற்கு எதிராக கருத்துச் சொல்வதும், விமர்சிப்பதும், போராடுவதும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கக் கூடிய உரிமையாகும்.

அரசு ஊழியர்களோ அல்லது அரசின் எந்த பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்தவர்களோ தங்களைப் பாதிக்கும் அரசின் கொள்கைகளை விமர்சிப்பதும் அதற்கு எதிராக போராடுவதும் அவர்களுக்கான உரிமையாகும்.

தனியார்மயம், ஒப்பந்தமுறை, வெளிமுகமை என எந்த சமூகப் பாதுகாப்பும் அற்றமுறையில் அரசுப் பணிகளுக்கான நியமனங்கள் நடப்பதும் அதன் காரணமாக பெரும்பாலான அரசுப் பணியிடங்கள் காலியாக இருப்பதும், அதனால் தமிழகத்தின் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதும் இயல்பாக இருக்கும் இந்த காலத்தில் அவற்றையெல்லாம் எதிர்த்து கருத்து தெரிவிப்பதும் போராடுவதும் குடிமக்களின் கடமையாகும்.

முந்தைய அரசு வெளியிட்ட உத்தரவாதமளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் கடைசியாக பெறும் சம்பளத்தில் 50 சதவிகிதம் என்று இருந்ததை இடைக்கால பயனாக 30 சதவிகிதமாக அறிவித்ததும், பின்னர் அதையும் 18 ஆண்டு பணி முதிர்வு அடையாதவர்களுக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் என்று அரசாணை வெளியிட்டதும் அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு கட்சிகளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களும் விமர்சித்த பிறகு, அரசு அதை திரும்பப் பெற்றதும் சமீபத்திய உதாரணமாகும்.

ஆகவே, விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத அம்சமாகும். விமர்சனம் செய்யக் கூடாது என்று மிரட்டுவது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலாகும். உடனடியாக மேற்கண்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

image-fallback
கர்நாடக தலைமைச் செயலகம் குறித்து ஏஐ வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in