

கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் பெ. சண்முகம் கட்சி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என பெயர் மாற்றம் செய்ய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது காந்தி என்ற பெயரை மாற்றுவதற்காக இப்பெயரை கொண்டு வந்துள்ளனர்.
மேலும், உத்தரவாதம் என்பதை நீக்கியுள்ளனர். இதன் மூலம் பயனாளிகள் உரிமையை இழக்கின்றனர். இனி வேலை தருவது அரசின் விருப்பம், அதை உரிமையாக கோர முடியாது. 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் இடங்கள் கேட்போம். 2026-ம் ஆண்டு தேர்தலில் பாஜக, அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வரக்கூடாது.
தேர்தலில் அவர்களை வீழ்த்தும் வலிமை படைத்த அணியாக திமுக உள்ளது. தவெக தலைவர் விஜய், பாஜகவை கொள்கை எதிரி என கூறினார். ஆனால், அவர் அணுகுமுறையில் கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு, கரூருக்கு முன், கரூருக்கு பின் என மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதால் கொள்கை எதிரியான பாஜகவை விஜய் விமர்சிப்பதில்லை. கேரளாவில் ஒரு மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில், மாநிலத்தையே கைப்பற்றியதுபோல, பிரதமர் ட்வீட் போட்டுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.