

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை: “சட்டப்பேரவையில் மத பிரச்சாரங்கள் நடந்த பொழுது பெ.சண்முகம் கோமாவில் இருந்தாரா?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதாபிராட்டியை மீட்பதற்காக, பகவான் ஸ்ரீ ராமனின் வழிகாட்டுதலில் வானரப் படைகள் உருவாக்கியதாக கருதப்படும் “ராமர் பாலம்” அமைந்துள்ள தனுஷ்கோடியில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த “கோதண்டராமர்” கோயிலைக் கொண்ட தனுஷ்கோடியில், பகவான் ஸ்ரீ ராமரை முன்னிறுத்தி “ராம யாத்திரை நாட்டியாஞ்சலி” என்ற பெயரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு?
இந்துக் கடவுள்களின் பெயரால் ஒரு கொண்டாட்டம் நடந்தால் மட்டும் “மதச்சார்பின்மை” என்று வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீர்களே, அனைவருக்கும் பொதுவான சட்டமன்றத்தில் உங்கள் கூட்டணிக் கட்சியான தவெக-வின் அமைச்சர் மரிய வில்சன், “I am a born Christian” என்று பெருமை பீற்றியது மதவெறி இல்லையா?
அதே அமைச்சர் ஜெபமாலையுடன் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தது மதக் குறியீடு இல்லையா? அதுமட்டுமன்றி, எனது பைபிள் கற்றுக் கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் புரியாது என்று கூறி அமைச்சர் மரிய வில்சன், நம் தமிழ் மொழியை இழிவுபடுத்தியது, வெளிப்படையான மத அரசியல் இல்லையா?
சட்டமன்றத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், விவிலியத்தை மேற்கோள் காட்டி பேசியது மதப் பெருமை இல்லையா? இவை குறித்து நீங்கள் வாய் திறக்காதது ஏன்? மதச்சார்பின்மை என்ற வார்த்தை இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? மற்ற மதத்தினருக்கு தமிழகத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இல்லையா?
இப்படி குறிப்பிட்ட ஒரு மதத்தினர் மீது மட்டும் காழ்ப்புணர்ச்சி கொண்டு வன்ம அரசியல் செய்வது தான், கம்யூனிசம் உங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடமா தோழரே?’ எனத் தெரிவித்துள்ளார்.