

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவது தான் எங்களது நோக்கம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் கீழ வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு புதிய சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்று, பழைய நடைமுறையே தொடர வேண்டும். இல்லையெனில், கிராமப்புறங்களில் தொழிலாளர்கள் புலம்பெயர்வு, தற்கொலை அதிகரிக்கும்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி மூலம் ஒரு கோடிவாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில், 27 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது நம்பக்கூடியது அல்ல. இடமாற்றம், முகவரி மாற்றம் என காரணம் காட்டி பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8,000 இழப்பீடு ஏற்புடையது அல்ல. உற்பத்தி செலவுக்கு ஏற்றார்போல இழப்பீட்டுத் தொகையை உரிய காலத்தில் தமிழக அரசு வழங்க வேண்டும்.
பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடிப்பதே 2026 தேர்தலில் எங்களின் நோக்கம். இதற்கு முன் நாங்கள் 20 முதல் 22 தொகுதிகள் வரை போட்டியிட்டுள்ளோம். எனவே, அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதும் எங்களின் நோக்கம்தான். அதற்கான முயற்சியை உரிய நேரத்தில் மேற்கொள்வோம். தமிழகத்தில் கடந்த காலத்தைவிட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகம் உள்ளதால், அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதன் பின்னணியில் பெரிய மனிதர்கள் யார் இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.