

சென்னை: டாஸ்மாக் உடன் இணைந்த பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2,700 கடைகள் பார் வசதியுடன் செயல்படுகின்றன. கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு பார்களுக்கான டெண்டர் விடப்பட்டு, அதன் ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு டிச.31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, புதிய டெண்டர் விடப்படாமல், ஒப்பந்த காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அந்த நீட்டிப்பும் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து, இடைப்பட்ட காலத்தில் பார்களை நவீன முறையில் வடிவமைத்தும், டெண்டர் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தும் பின்னர் டெண்டர் விட டாஸ்மாக் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பார் உரிமையாளர்களிடமும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பார்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பார் உரிமையாளர்கள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநரை சந்தித்து, பார்களை மூடும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பார் உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் உடனடியாக மூட உத்தரவிட்டால், பார் தொழிலை நம்பி இருக்கும் ஒரு லட்சம் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினர். எனவே, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், பார் உரிமையாளர்களுடன் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் புதிய டெண்டர் அறிவிப்பதா அல்லது கால நீட்டிப்பு வழங்குவதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பின்னர், அமைச்சருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ‘பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க காவல் துறை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதை மீறி பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.