

எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். படம்: எஸ்.குருபிரசாத் | அடுத்த படம்: ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. பழனிசாமி, நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, தமிழிசை சவுந்தரராஜன், பிரேமலதா உள்ளிட்டோர் மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகம் முழுவதும் தாக்கல்செய்யப்பட்டுள்ள 7,000-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதன்பின்னர், 4 பொது விடுமுறை நாட்களில் மனு தாக்கல் நடைபெறவில்லை.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் காலை முதலே மனு தாக்கல் களைகட்டியது.
எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சாத்தூரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அவிநாசியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மயிலாப்பூரில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவை வடக்கில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், தருமபுரியில் சவுமியா அன்புமணி ஆகியோரும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதுபோல தமிழகம் முழுவதும் அதிமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஏராளமானோர் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
மனு தாக்கலுக்கான அவகாசம் மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் கடைசி நாளான நேற்று மட்டும் 1,500-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இதுவரை 628 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 66 மனுக்களும், முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 56 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், துணை அலுவலர்கள் உதவியுடன் மனுக்கள் பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதில் வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் பங்கேற்பார்கள். இப்பணிகளை பொதுப் பார்வையாளர்கள் மேற்பார்வையிடுவார்கள்.
மனுக்கள் பரிசீலனையின்போது, விண்ணப்ப படிவங்களில் பெயர், வயது, தொகுதி, வருமானம் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும். தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா, குற்ற வழக்கு தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளதா, வேட்பாளர்கள், முன்மொழிபவர்களின் கையொப்பங்கள் சரியாக இடப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்படும்.
இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால், மற்ற வேட்பாளர்கள் சார்பில் ஆட்சேபங்களைத் தெரிவிக்கலாம். அதன்பிறகு, வேட்புமனுக்களை ஏற்பது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள். ஏற்கப்படுகிற, தள்ளுபடி செய்யப்படுகிற வேட்புமனுக்கள் விவரம் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.