

சென்னை: தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், சரித்திரப்பதிவேடு அல்லாத குற்றவாளிகள், போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையதலைமறைவு குற்றவாளி களுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த மே 28 முதல் ஜூன் 10-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 36,740 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர், அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1,328 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக சோதனை செய்ததில் 231 கிலோ கஞ்சா, 4,073 போதை மாத்திரைகள், 22.55 கிராம் மெத்தாம்பெட்ட மின், 362.5 கிலோ குட்கா பொருட்கள் போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அதில் தொடர்புடைய 202 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். மேலும், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.