“விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை நிச்சயம் கிடைக்கும்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி

“விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை நிச்சயம் கிடைக்கும்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி
Updated on
2 min read

தருமபுரி: “தகுதியுடைய விடுபட்ட பெண்களுக்கு நிச்சயமாக உரிமைத் தொகை கிடைக்கும்” என பாப்பிரெட்டிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன் இல்லத் திருமண விழா இன்று பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மோளையானூர் கிராமத்தில் நடைப்பெற்றது. விழாவுக்கு தலைமை தாங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ,மணமக்கள் எழில்மறவன்- கிருத்திகா திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசுகையில், “தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள், புதிய ,புதிய திட்டங்களை தொடங்கி வைக்கக்கூடிய நிகழ்ச்சிகள், அது மட்டும் இல்லாமல் கட்சியின் நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டங்கள், கழக குடும்பங்களில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள். இவ்வாறு ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு இடையில் உங்களை எல்லாம் பார்க்கும் வகையில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியால் எனக்கே ஒரு ரிலாக்ஸ் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் ஒரு மாபெரும் நிகழ்ச்சி. அதேபோல மகளிர்களுக்கான கலைஞர் பெயரால் வழங்கப்படக்கூடிய மகளிர் உரிமைத் தொகை கூடுதலாக 17 லட்சம் பேருக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். இதனோடு ஏற்கெனவே 1 கோடியே 13 லட்சம் பேருடன் மொத்தமாக 1 கோடியே 30 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கியுள்ளோம். இன்னும் தகுதியுடைய விடுபட்ட மகளிர்க்கும் நிச்சயம் வழங்கப்படும்.

ஜிடிபி வளர்ச்சியில் இன்று தமிழ்நாடு தான் நம்பர் ஒன் மாநிலமாக உருவாகியுள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. எவ்வளவோ சோதனைகள், அந்த சோதனைகளை எல்லாம் தாண்டி தமிழக அரசு சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற திராவிட மாடல் ஆட்சி.

எஸ்ஐஆர் பணியில் பம்பரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். நமது வாக்குரிமையை நாம் காப்பாற்றி ஆக வேண்டும். அதற்காக எஸ்ஐஆர் பணிகளில் விழிப்போடு வேலை பார்த்திருக்கிறோம். அதே நேரத்தில் பாதி வேலை தான் முடிந்து இருக்கிறது. இன்னும் பாதி வேலை அப்படியே உள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிந்து ரிசல்ட் அறிவிக்கும் வரை வேலை பாக்கியுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் உள்ளது. நமது சாதனைகள், திட்டங்கள், பணிகளை மக்களுக்கு கொண்டு சென்று வாக்குகளாக மாற்ற வேண்டும். 7-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி வந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும்போது சட்டமன்றத்தில் பேசும்போது கண்ணியமாகவும், ஜனநாயக முறையிலும் பொறுப்பாக பதில் சொன்னவர் அன்றைய அமைச்சராக இருந்த பழனியப்பன் மட்டும்தான்” என்றார்.

விழாவில் அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர் செல்வம், , சாமிநாதன், ராஜேந்திரன், சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாநில பொது செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

“விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை நிச்சயம் கிடைக்கும்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பா? - ஊடக கணிப்புகளுக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in