

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: இந்து கோயிலுக்குள் பிற மதத்தினர் செல்லும் விவகாரத்தில் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் தங்கம் வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: இந்து கோயில்களில் பிற மதச் சின்னங்களை அணிந்திருப்பவர்கள், இந்து மத நம்பிக்கையை பின்பற்றாதவர்கள் கோயில் கருவறை மற்றும் மண்டபங்களுக்கு செல்லக் கூடாது என விதி உள்ளது. இந்த விதி சமீபகாலங்களில் இந்து கோயில்களில் பின்பற்றப்படுவதில்லை. பிற மதச் சின்னங்களை அணிந்திருப்பவர்கள் தடையில்லாமல் கோயிலுக்குள் சென்றுவரும் நிலை உள்ளது.
எனவே, தமிழகத்தில் அனைத்து பொதுக் கோயில்களிலும் பிற மதச் சின்னங்களை அணிந்திருப்பவர்கள் மற்றும் இந்து மதத்தைச் சாராதவர்கள், கோயிலின் கட்டுப்படுத்தப்பட்ட கருவறை மற்றும் மண்டபங்களுக்குள் நுழைவதைத் தடுக்கவும், தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம், இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவுகளை கடுமையாக அமல்படுத்தவும், பிற மதச் சின்னங்களை வெளிப்படையாக அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்து கோயில்களுக்குள் பிற மதத்தினர் சென்று வழிபாடு நடத்தும்போது, விதிப்படி ‘நம்பிக்கை உள்ளது’ என கையெழுத்திட்டுச் செல்ல வேண்டும்.
இந்த முறையை பின்பற்றித்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் முதல்வர் விஜய் சென்றார். ஆனால், திருச்செந்தூர் கோயிலுக்குள் அமைச்சர் ஸ்ரீநாத் செல்லும்போது அந்த முறை பின்பற்றப்படவில்லை.
திருவண்ணாமலை கோயிலில் இஸ்லாமியர் ஒருவர் மத அடையாளத்தை அணிந்து சென்றுள்ளார். விதிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே. பிற மதத்தினருக்கான விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.