

சென்னை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை தொழிலாளர் நல தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அவசரசிகிச்சையுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில், தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் செயல்படுத்தப்படுகிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், தினமும் 12 மணி நேரம் என்ற அடிப்படையில் 2 ஷிப்ட்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்து 3 ஷிப்ட்டுகளாக்கக் கோரி தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த விவகாரம் சென்னைதொழிலாளர் நல தீர்ப்பாய விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் அதன் தலைவரான நீதிபதி பி.முருகன் முன்பாக இந்த வழக்குவிசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் தரப்பில், “12 மணி நேரம் ஓய்வில்லாமல் பணியாற்றுவதால் தூக்கமின்மை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிவேகமாக தூக்கமில்லாமல் ஓட்டிச்செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
108 ஆம்புலன்ஸ்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு தனியாக ஓய்வறைகளோ, கழிப்பிட வசதிகளோ இல்லை. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்நோயாளிகளுக்கென தனித்தனியாக உள்ள கழிப்பறைகளையும் 108 ஊழியர்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இதனால் அவசர நேரங்களில் அவர்கள் பெரிதும் திண்டாட நேரிடுகிறது. பொதுவாக 12 மணி நேர வேலை என்பது தொழிலாளர் சட்டங்களுக்கு விரோதமானது.
எனவே எங்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணிநேரமாகக் குறைக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.108 ஆம்புலன்ஸ் சேவையை இயக்கிவரும் இஎம்ஆர்ஐ - ஜிஹெச்எஸ் நிறுவனம் தரப்பில்,“ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு நாடு முழுவதும் ஒரேமாதிரியாக 12 மணி நேர வேலைத் திட்டமே பின்பற்றப்படுகிறது.
அதை ஏற்றுக்கொண்டுதான் ஊழியர்களும் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு 12 மணி நேரத்துக்கான ஊதியம்தான் வழங்கப்படுகிறது. 12 மணி நேர வேலைக்கு சம்மதம் தெரிவித்து பணியில் சேர்ந்துவிட்டு தற்போது 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் எனக்கோர முடியாது” என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “சர்வதேச தொழிலாளர் அமைப்பு விதிகளின்படி தினமும் 8 மணி நேரமே பணியாளர்களுக்கான உடல் உழைப்பு வேலை நேரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12 மணி நேரவேலை நேரம் என்பது தொழிலாளர் சட்டங்களுக்கு விரோதமானது. ஓவர்-டைம் பார்ப்பது என்பது தொழிலாளர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. எனவே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் 12 மணிநேர பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்.
இந்த உத்தரவு குறித்து தொழில் தகராறு சட்டத்தின் கீழ் முறையாக அரசிதழில் அறிவிக்கை செய்தநாளில் இருந்து 30 நாட்களுக்குள் 8 மணிநேர பணி நடைமுறைஅமலுக்கு வரும். அதுவரை 12 மணி நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணிக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஓய்வறை, கழிப்பறை வசதி: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கென தனியாக ஓய்வறை மற்றும் கழிப்பறை வசதிகளைசெய்து கொடுக்க வேண்டும். அதேபோல மருத்துவமனை களில் உள்ள கழிப்பிடங்களை சுத்தமாகப் பராமரித்து அதன் ஒரு சாவியை 108 ஆம்புலன்ஸ் பெண் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கவேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள கழிப்பறைகளை 108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியர்கள்
எந்நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட வேண்டும். ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் இடங்களில் தனி ஓய்வறை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.