

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி சார்பில் நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
சென்னை: டெங்கு காய்ச்சலில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகள், மற்றும்பல்கலைக்கழகங்களை தூய்மையாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
கொரிய குடியரசின் கல்வி அமைச்சகம், சர்வதேச கல்விக்கான தேசிய நிறுவனம், சென்னையில் உள்ள கொரிய துணை தூதரகம் சார்பில் ‘ஸ்டடிஇன் கொரியா’ உயர்கல்வி கண்காட்சி ராஜா அண்ணாமலை புரம் லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று நடந்தது. 12 கொரிய பல்கலைக்கழகங்கள் பங்கேற்ற இந்த கல்வி கண்காட்சியை தமிழக உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவரின் மரண அறிக்கையில் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா, ப்ளூ காய்ச்சல் எதுவாக இருந்தாலும் பல்கலைக்கழகங்கள் பாதுகாப்பாக, சுகாதாரமாக இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டுமொத்தமாக சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவர்களுக்கு உடனடியாகமருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றும் பதிவாளருக்கு அறிவுரை வழங்கினேன்.
அதன் பேரில் பல்கலைக்கழகவளாகத்தில் தூய்மை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பாதிப்பை தவிர்க்க, தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தூய்மை நிறைந்த வளாகமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். அனைத்து மாணவர்களையும் அரசு பாதுகாக்கும்.
தனியார் பல்கலை. மசோதா தனியார் பல்கலைக்கழக மசோதா ஆளுநரால் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது முக்கியமான மசோதாவாக பார்க்கப்படுகிறது. திமுக அரசு கடந்த 2025-ல் கொண்டுவந்த தனியார் பல்கலைக்கழக மசோதா வாபஸ் பெறப்பட்டது. ஏற்கெனவே உள்ள கல்வி நிறுவ
னத்தை ஒரு பல்கலைக்கழகமாக மாற்ற வகைசெய்யும் மசோதாதான் திமுக அரசின் மசோதா. நாங்கள் இப்போது கொண்டுவந்திருப்பது புதிய தனியார் பல்கலைக்கழகம் அமைக்க வகை செய்யும் மசோதா ஆகும். அனைத்து அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் உலக தரத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த மசோதாவை கொண்டுவந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.