

மதுரை: கொடைக்கானலில் பட்டா நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற விடாமல் தடுத்த வழக்கறிஞர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ஹபீப் ரகுமான், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கொடைக்கானல் சீனிவாசபுரத்தில் எனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் தொடர்ந்து நடந்துவரும் கட்டுமானங்களை நிறுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. நகராட்சி ஆணையர் தரப்பில், மனுதாரர் நிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை வழக்கறிஞர்கள் சிலர் தடுத்தனர் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படுவதை தடுத்த வழக்கறிஞர்களின் பெயர்களை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஏப். 28-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என்றனர்.