

சென்னை: பெருங்களத்தூரில் தனியார் நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முறைகேடாக திட்ட அனுமதி வழங்க ரூ.28 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் மேல்விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்த வைத்திலிங்கம், பெருங்களத்தூரில் ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் மலையை ஒட்டிய பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட விதிகளை மீறி திட்ட அனுமதி வழங்கியுள்ளதாகவும்,
இதற்காக ரூ. 28 கோடியை லஞ்சமாக பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டி அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 2 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சி காலத்தில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் வைத்திலிங்கம், கடந்த ஜனவரி மாதம் திமுகவில் இணைந்தார்.
அதையடுத்து இந்த வழக்கில் வைத்திலிங்கத்துக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கடந்த திமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் தவெக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திரும்பப்பெறவும, இந்த வழக்கில் மேல்விசாரணை நடத்தவும் அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதியளித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.