கடமலைக்குண்டுவில் நடந்த திமுக பிரச்சார கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்.

கடமலைக்குண்டுவில் நடந்த திமுக பிரச்சார கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்.

“நான் செய்த தவறு பழனிசாமி அரசுக்கு ஆதரவளித்தது தான்” - ஓபிஎஸ் ஒப்புதல் வாக்குமூலம்

Published on

“கடந்த காலத்தில் நான் செய்த தவறு பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளித்தது தான். அதனால்தான் அவரது ஆட்சி தொடர்ந்தது” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்த பிறகு முதல்முறையாக தனது சொந்த மாவட்டமான தேனியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட கடமலைக்குண்டுவில் நடந்த திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ் பேசியதாவது: கடந்த காலத்தில் நான் செய்த தவறு பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளித்ததுதான். அதனால்தான் அவரது ஆட்சி தொடர்ந்தது.

நான் தர்மயுத்தம் நடத்தியதும் தவறு. ஜெயலலிதா காலத்தில் கட்சியில் உள்ள பலருக்கும் பொறுப்புகளை வாங்கித் தந்திருக்கிறேன். சில அமைச்சர்கள் மீது ஜெயலலிதா கோபப்பட்டபோது, அவரை சமாதானப்படுத்தி பதவியில் தொடர வைத்தேன். ஆனால், அப்படிப்பட்டவர்கள் தான் எனக்கு எதிராக ஒட்டுமொத்தமாகத் திரும்பினர்.

தென் தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்து மக்களின் எண்ணங்களை அறிந்து வருகிறேன். அங்கெல்லாம், ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து உரிய நிதி பகிர்வு இல்லாத நிலையில், மாநில நிதி மூலம் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் இருந்து பல்வேறு அழுத்தங்கள் வந்தாலும், ஸ்டாலின் அசராமல் ஆட்சி நடத்தி வருகிறார். நன்றி கெட்ட அரசியல்வாதி பழனிசாமி. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சென்னையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு நடைபெறும். பொதுவாக டெல்லியில் இருப்பவர்கள்தான் இதற்காக தமிழகம் வருவார்கள். ஆனால், இன்றைக்கு அந்த நிலை அதிமுக-வில் மாறி விட்டது.

டெல்லி சென்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அடிமை நிலையை பழனிசாமி உருவாக்கி விட்டார். உலகத்தை இயக்கும் ஒன்பது கோள்களில் ஆற்றல் மிக்க கோள் சூரியன். இதை உணர்ந்துதான் அண்ணா இச்சின்னத்தை தேர்வு செய்துள்ளார். எந்தச் சூழலிலும் ஆளும் தன்மை கொண்டது உதயசூரியன் தான். இவ்வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>கடமலைக்குண்டுவில் நடந்த திமுக பிரச்சார கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்.</p></div>
“4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்” - அமித் ஷா சந்திப்புக்குப் பின் இபிஎஸ் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in