மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி: சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி: சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நீதிபதிகள் கடற்கரையை நேரில் ஆய்வும் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என உத்தரவிட்டு, நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர்..

இந்த நிலையில் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகராட்சி சார்பில் கடைகளின் ஒதுக்கீடு தொடர்பான திட்ட வரைபடத்தை தாக்கல் செய்தனர். இதை ஆய்வு செய்த நீதிபதிகள் கடைகளை கடந்த உத்தரவின் அடிப்படையில் வந்து கடைகளில் எண்ணிக்கையை 1417-இல் இருந்து 1066 ஆக குறைத்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மெரினாவில் உணவு பொருட்கள், பொம்மை கடைகள், பேன்சி கடைகள் என 300 கடைகள் மட்டும் அமைக்க அனுமதி கொடுத்தனர்.

கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்தியாவிலேயே சென்னை மெரினாவில் தான் அதிக கடைகள் இருப்பதாகவும் கடற்கரையை வணிக வளாகமாக மாற்றாதீர்கள் எனவும் தெரிவித்தனர்.

கேரளாவில் உள்ள கோவளம் கடற்கரை வெளிநாட்டில் உள்ளது போல் உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், சென்னை மெரினா கடற்கரை அப்படி இல்லை என வருத்தம் தெரிவித்தனர். எனவே மெரினா கடற்கரையின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மெரினா நீலக்கொடி பகுதியாக சான்று பெற்றதற்கு பாராட்டு தெரிவித்தனர். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி: சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
கொல்கத்தா ‘ஐ-பேக்’ அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in