

திருச்சி: மானிய விலையில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் திருச்சியில் ஒரேநாளுடன் நின்றுபோனது. நுகர்வோரிடம் பெரிதும் வரவேற்பு பெற்ற இத்திட்டத்தை, வெங்காயம் விலை வெளிச்சந்தையில் ரூ.35 ஆக குறையும்வரை தொடரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.80 வரை விற்பனையாவதால் மக்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து, தமிழக அரசு நகர்ப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மானிய விலையில் கிலோ ரூ.35-க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை செப்.3-ம் தேதி தொடங்கியது.
இதில் திருச்சி மாநகரில் முதற்கட்டமாக அதிக ரேஷன் கார்டுகள் உள்ள 100 கடைகளில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக கார்டுக்கு ஒரு கிலோ வீதம் கணக்கிடப்பட்டு 10 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, கடைக்கு தலா 100 கிலோ வீதம் அனுப்பப்பட்டது. இதில் 2 கிலோ கழிவு அனுமதிக்கப்பட்டதால் ரேஷன் கடைக்காரர்கள் 98 கிலோ வெங்காயத்துக்கு மட்டும் பணம் செலுத்தினர்.
ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெங்காயம் வழங்கும் திட்டத்தில், இத்திட்டம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே வெங்காயம் முழுவதும் விற்று தீர்ந்தது. அதன்பிறகு ஒரு வாரம் ஆகியும் ரேஷன் கடைகளுக்கு வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால், மானிய விலையில் வெங்காயம் வாங்க காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பெரிதும் பயனுள்ள இத்திட்டத்தை பாரபட்சமின்றி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரிவுபடுத்தி, வெளிச்சந்தையில் கிலோ வெங்காயம் ரூ.35-க்குக் கீழ் குறையும் வரை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கூறியது: திருச்சி மாவட்டத்துக்கு முதற்கட்டமாக வரப்பெற்ற 10 டன் வெங்காயம் முழுமையாக விற்று தீர்ந்துவிட்டது. மக்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக அடுத்த கட்டமாக வெங்காயம் அனுப்புமாறு கேட்டிருக்கிறோம். இன்னும் வரவில்லை. திருச்சி மாவட்டத்துக்கான வெங்காய ஒதுக்கீடு வரப் பெற்றதும் ரேஷன் கடைகளுக்கு பிரித்து வழங்கப்படும் என்றனர்.