பழைய ரயில் பெட்டியில் உணவகம் - சேலத்தில் கவனம் ஈர்ப்பு

பழைய ரயில் பெட்டியில் உணவகம் - சேலத்தில் கவனம் ஈர்ப்பு
Updated on
1 min read

சேலம்: பயணக் கட்டணமில்லா வருவாய் கொள்கை என்ற அடிப்படையில், சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தனியார் மூலம் பழைய ரயில் பெட்டியில் உணவகம் அமைக்கும் திட்டத்தில், சேலம் அயோத்தியாப் பட்டணத்தில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தைத் தொடர்ந்து ஈரோடு, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணத்தில், பழைய ரயில் பெட்டியை புதுப்பித்து அமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டி உணவகத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னா லால் இன்று திறந்து வைத்தார்.

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை மேற்கொள்வதில் சேலம் ரயில்வே கோட்டம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ரயில் பெட்டி உணவகம் என்ற திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, சேலம் - விருத்தாசலம் ரயில் பாதையில் அமைந்துள்ள சேலத்தை அடுத்த அயோத்தியாப் பட்டணம் ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், பழைய ரயில் பெட்டியை புதுப்பித்து, அதில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டி உணவகத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னா லால் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கோட்ட கூடுதல் மேலாளர் சரவணன், கோட்ட வணிக மேலாளர் மல்லிகா, கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில், பயணக்கட்டணமில்லா வருவாய் கொள்கை அடிப்படையில், ரயில் பெட்டி உணவகம் 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், “பழைய ரயில் பெட்டிகளைப் புதுப்பித்து, அவற்றினுள் உணவகம் அமைத்து, பயணிகள், பொதுமக்கள் பயன்படும் வகையில், புதுமையான வகையில் ரயில் பெட்டி உணவகம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் ஒப்பந்த காலத்தில் சேலம் கோட்டத்துக்கு ரூ.46.20 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், போத்தனூர், மேட்டுப்பாளையம், உதகமண்டலம் ரயில் நிலையங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.

பழைய ரயில் பெட்டியில் உணவகம் - சேலத்தில் கவனம் ஈர்ப்பு
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றது ஏன்? - உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in