

கோவை: தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட ஆறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (அக்.20) கோவையில் உள்ள அவரது இல்லத்தில் காவல் துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட அவரை போலீஸார் தாராபுரம் அழைத்து சென்றனர்.
தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய், அக்.4-ம் தேதி வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வீராச்சிமங்கலம் என்ற பகுதியில் முதல்வர் செல்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா தொண்டர்களுடன் வாகன பேரணியாக வந்தார்.
முதல்வர் வருகைக்காக அங்கு நின்றிருந்த போலீஸார் பாதுகாப்பு கருதி அவர்களை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அப்போது நாதகவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் முதல்வரின் வாகனம் அவ்வழியாக வரத்தொடங்கியது. இந்நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், தேர்தல் பரப்புரையின் போது பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தை கார்த்திகா தலைமையில் நாதகவினர் முற்றுகையிட்டனர். இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா வெற்றி பெற்றார். நாதக வேட்பாளர் கார்த்திகா 5,268 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார். கடந்த பொதுத்தேர்தலில் தாராபுரத்தில் அக்கட்சி வேட்பாளர் திவ்யா வாங்கிய 6,026 வாக்குகளைவிடவும் இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அக்கட்சியின் வாக்கு சதவீதமும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.