என்.ஆர்.காங்கிரஸில் யாருக்கெல்லாம் சீட்? - பொல்லாப்பைச் சந்திக்கத் தயாராகும் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Updated on
1 min read

கடந்த முறையைப் போலவே இம்முறையும் 16 தொகுதிகளை என்.ஆர்.காங்கிரஸுக்கு அமித் ஷாவிடம் உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு தான் என்டிஏ-வில் தொடர்வதாக வெளிப்படையாக அறிவித்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரியில் கடந்த முறை 10 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த முறை, ரங்கசாமிக்கு அவர் கேட்டபடி பாஜக 16 தொகுதிகளை ஒதுக்கினாலும் யாருக்கு சீட் தருவது என்பதில் பெரும் பிரச்சினையை ரங்கசாமி சந்திக்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது. அந்தளவுக்கு மக்களிடம் பிரபலமான புதியவர்கள் பலரும் இம்முறை ரங்கசாமியை சீட்டுக்காக வட்டம் போடுகிறார்கள். இதனால், சிட்டிங் எம்எல்ஏ-க்களில் 5 பேருக்காவது அவரால் சீட் ஒதுக்கமுடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இதைப் புரிந்துகொண்டு, என்.ஆர்.காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏ தொகுதிகள் சிலவற்றில் ‘முதல்வர் ஆசியுடன்’ என போஸ்டரில் ‘பிள்ளையார் சுழி’ போட்டுவிட்டே தேர்தல் பணிகளை விறு விறுப்பாகச் செய்து வருகிறார்கள். கடந்த முறை கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட சில தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸார் இப்போது தேர்தல் பணிகளில் வேகமெடுக்கிறார்கள். கடந்த முறை காங்கிரஸிலிருந்து கட்சி மாறி வந்த சிலருக்கும் வாய்ப்பளித்தார் ரங்கசாமி.

அவர்கள் வென்றதால் தான் அவருக்கு ஆட்சி கைகூடியது. அதேபோல், இப்போதுள்ள சிட்டிங் எம்எல்ஏ-க்களில் சிலர் மக்களுக்கு பரிச்சயமான முகமாக இருப்பதால் அவர்களை ரங்கசாமியால் ஒதுக்கமுடியாது. அப்படி ஒதுக்கினால் அவர்கள் கட்சி மாறி களம் கண்டு ரங்கசாமியின் வெற்றிக்கே சவால் விடக்கூடும்.

இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “வேட்பாளர்களை இறுதி செய்யும் முன்பு அவர்களின் ஜாதகத்தை வாங்கி ஆஸ்தான ஜோதிடரிடம் கலந்தாலோசித்த பிறகு தான் ரங்கசாமி முடிவு செய்வார். கூடுதலாக, தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சாமியிடமும் அருள்வாக்கு கேட்பார். இதனால் வேட்பாளர் அறிவிப்பானது கடைசி நேரம் வரை சஸ்பென்ஸாகத்தான் இருக்கும்.

அதேசமயம், இந்த முறை புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் தலைவர் இருக்கிறார்” என்றனர். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்ற தகவல் பரவலாகப் பேசப்படுவதால் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள சிட்டிங் எம்எல்ஏ-க்களில் பலரும் ரங்கசாமி எங்கு சென்றாலும் அவருக்கு முன்னும் பின்னுமாய் வந்து முகம்காட்டி நிற்கிறார்கள்.

ஆக மொத்தத்தில், இம்முறை என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதில் புதுச்சேரி மக்களைவிட அந்தக் கட்சியினரே அதிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

<div class="paragraphs"><p>புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி </p></div>
காலில் விழுந்த காங்கிரஸாரால் கடந்த தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பு: ஜெகத்ரட்சகன் கிளப்பிய புயல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in