நெடுங்காட்டில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ்? - ‘தீவிரம்’ காட்டிய பாஜகவுக்கு ஏமாற்றம்!

சந்திர பிரியங்கா

சந்திர பிரியங்கா

Updated on
1 min read

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட பாஜக பகீரத பிரயத்தனம் செய்து வந்த நிலையில், அந்தத் தொகுதி கூட்டணியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தற்போது காரைக்கால் தெற்கு, நிரவி- திருப்பட்டினம் தொகுதிகள் திமுக வசமும், காரைக்கால் வடக்கு, நெடுங்காடு தொகுதிகள் என்.ஆர்.காங்கிரஸ் வசமும், திருநள்ளாறு தொகுதி சுயேச்சை வசமும் உள்ளன.

நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு ஆகிய தொகுதிகளில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக, வரும் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்ட தொகுதிகளுடன் கூடுதலாக நெடுங்காடு தொகுதியிலும் போட்டியிட தீவிரம் காட்டி வந்தது.

அதற்கேற்ப பாஜக நிர்வாகிகள் அத்தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக உள்ள சந்திரபிரியங்காவுக்கு எதிராகவும், அவரை விமர்சித்தும், தொகுதி வளர்ச்சியடையவில்லை என்றும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்தும், தெருமுனை கூட்டங்கள் நடத்தியும் இம்முறை தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டு வந்தனர்.

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் காரைக்காலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நெடுங்காடு தொகுதிக்கு உட்பட்ட கோட்டுச்சேரியில் சுவர் விளம்பரத்தில் தாமரை சின்னம் வரைந்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இதனால், அந்தத் தொகுதி எப்படியும் தங்களுக்கு கிடைத்துவிடும் என பாஜகவினர் நம்பியிருந்தனர்.

இதனிடையே, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நீண்ட இழுபறிக்குப் பின்னர், கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று மாலை முடிவுக்கு வந்தது. அதில் காரைக்கால் மாவட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட காரைக்கால் வடக்கு, நெடுங்காடு ஆகிய தொகுதிகளுடன் காரைக்கால் தெற்கு (இங்கு கடந்த முறை அதிமுக போட்டியிட்டது) என 3 தொகுதிகளும், பாஜகவுக்கு கடந்த முறை போட்டியிட்ட திருநள்ளாறு, நிரவி - திருப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது என்.ஆர்.காங்கிரஸ் வசம் உள்ள நெடுங்காடு உள்ளிட்ட சில தொகுதிகளை பாஜகவுக்கு விட்டுத்தர மறுத்ததும், என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே நீடித்து வந்த கூட்டணி இழுபறிக்கான பல்வேறு காரணங்களுள் ஒன்றாக கூறப்பட்டது.

நெடுங்காடு தொகுதி எப்படியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிடும் என்று உறுதியாக நம்பி வந்த பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டால், நேற்று முன்தினம் வரை எதிரெதிர் துருவங்களாக நின்று தீவிர தேர்தல் களப்பணியாற்றியவர்கள் தற்போது ஒருங்கிணைந்து கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு உறுதுணையாக களப்பணியாற்றுவார்களா என்ற கருத்தும் பேசப்படுகிறது.

இதனிடையே, கூட்டணி பேச்சு வார்த்தை முடிவடையும் முன்பே இந்தத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்எல்ஏ சந்திர பிரியங்கா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>சந்திர பிரியங்கா</p></div>
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in