

மதுரை: “ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெகவில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்விதான் மிஞ்சும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மதுரை ஆதினத்தை இன்று நேரில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: “தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தேர்தல் என்று வரும்போது ஆட்சியில் இருப்பவர்கள் முந்தைய தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா இல்லையா என்பதைத்தான் மக்கள் பார்ப்பார்கள்.
நான்காண்டு கால ஆட்சியில் சொத்து வரி, மின்சார வரி பல மடங்கு உயர்ந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவில்லை. ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆயிரம் முறை சொன்னார் அமைச்சர் துரைமுருகன். ஆனால் ஒரு தடுப்பணைகூட கட்டவில்லை. இந்த தேர்தலில் பொங்கலுக்கு ரூ.5,000 தரப்போகிறார்கள். இது தொடர்பாக நான் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். என் கோரிக்கையை முதல்வர் நிராகரிக்க மாட்டார். அரசு அவர்களிடம் இருப்பதால் ரூ.10 ஆயிரம் கூட கொடுக்க வாய்ப்புள்ளது. இது தேர்தலுக்கான அரசு.
மாநிலம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. போதைப் பழக்கத்தால் பாலியல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதையும் தாண்டி திமுகவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகிறீர்களா?
தவெகவுக்கு ஒரு கவுன்சிலர்கூட இல்லை. அங்கு போய் செங்கோட்டையன் சேர்ந்துள்ளார். சேராத இடத்தில் சேர்ந்தால் தோல்விதான் கிடைக்கும். தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். பிஹாரைப் போல் தமிழகத்திலும் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பாஜக கூட்டணிக்குத்தான் வரும்.
டிடிவி தினகரன் கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இல்லை. இதனால் பாஜக கூட்டணிக்கு வாக்குகள் குறையும் என்பது எப்படி சரியாகும். அண்ணாமலை பாஜகவில் உள்ளார். மாநிலத் தலைவராக இருந்துள்ளார். அவர் தனிக்கட்சி தொடங்க மாட்டார். தமிழகத்தில் பழனிசாமி தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்கிறோம். பழனிசாமி தலைமையை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் காலம் காலமாக தீபம் ஏற்றப்பட்டு வந்தது, இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது நீதிமன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியே” என்று அவர் கூறினார்.