

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சட்டப்பிரிவு 46(3)-ல் நிர்வாகத் திட்டம் உள்ள 27 கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறங்காவலர் நியமன அறிவிப்பு, அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்கள் விவரம், நிர்வாகத் திட்ட விவரம், தகுதிகள், விண்ணப்பப் படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயில், பெரியமேடு எல்லம்மன் கோயில், சூளை அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விசுவநாத சுவாமி கோயில், ஓட்டேரி செல்லபிள்ளைராயர் கோயில், வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோயில், கோவை மாவட்டம் இடுகம்பாளையம் அனுமந்தராய சுவாமி கோயில் உட்பட 27 கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எனவே கோயிலுக்கு அறங்காவலராக விண்ணப்பிப்பவர்கள் கோயிலுக்கென ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத்திட்ட சரத்துக்களை www.hrce.tn.gov.in இணையதளத்தில் பார்வையிட்டு படித்து அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இணைய வழியில் பூர்த்தி செய்தோ பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவு அஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பலாம். ஆக.5-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.