

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் அரசு ஊழியர் அல்லாத நபர் ஒருவர் 10 ஆண்டுகளாக அரசு ஊழியர் போல் பணியாற்றியது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் குறித்து சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊழியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்து, அதுகுறித்து அலுவலக மேலாளரிடம் விசாரித்தார்.
அப்போது, அரசு அலுவலர் அல்லாத சிவகாசி அருகே உள்ள விஸ்வநாதத்தை சேர்ந்த பாண்டி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
அரசு ஊழியராக நியமனம் இல்லாமல் அரசு அலுவலகத்தில் தனி நபர் பணியாற்றி வருவது குறித்து எம்எல்ஏ ரகுராமன் கேள்வி எழுப்பியபோது அலுவலக மேலாளர் மற்றும் பாண்டி ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அலுவலகத்தில் அரசு அலுவலரின் இடத்தில் அரசு அலுவலர் அல்லாத நபர் எவ்வாறு பணிபுரிய முடியும்? இதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் எப்படி ஒத்துழைக்க முடியும் என ரகுராமன் எம்.எல்.ஏ. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
ஒன்றிய செயற்பொறியாளருக்கு உதவியாக பாண்டி பணிபுரிந்து வருவதாகவும், பொறியாளர்களே பாண்டிக்கு ஊதியம் வழங்குவதாகவும் கூறப்படுகிறது.