

படம்: என்.கணேஷ்ராஜ்
போடி: வெளி மாநிலங்களில் இருந்து சபரிமலையை குறுகிய தூரத்தில் இணைக்கும் தேனி மாவட்டத்துக்கு சிறப்பு ரயில்களை இயக்காததால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கேரளா வழியே சுற்றிச் செல்லும் ரயில்களால் நேரமும் செலவும் அதிகரிப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ள நிலையில், உடனடியாக சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச.27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதைத் தொடர்ந்து கடந்த 17-ம் தேதி முதல் தொடர் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. சபரிமலைக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாது தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்கள் அதிகளவில் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், தொலைதூர பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னை எழும்பூர் - கொல்லம் (06121), சென்னை சென்ட்ரல் - கொல்லம் (06083), சர்லபள்ளி (ஹைதராபாத்) - கொல்லம் (07691) மற்றும் நாந்தேட் (மகாராஷ்டிரா) - கொல்லம் (07687) என பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவை அனைத்தும் கேரளா வழியே பல நூறு கி.மீ சுற்றுப்பாதையில் செல்லக்கூடிய வழித்தடமாகும். ஆனால், தேனி மாவட்டமானது சபரிமலை வனப்பாதைகளையும், ஐயப்பன் கோயில் அடிவாரத்தையும் குறைவான தூரத்தில் கொண்டு சேர்க்கக்கூடிய சாலை ஆகும்.
ஆகவே, சபரிமலை சீசனுக்கு போடிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதற்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், “சபரிமலைக்கான முக்கிய வனப்பாதை, தேனி மாவட்டம் அருகிலேயே அமைந்துள்ளது. குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு (15 கி.மீ) சென்று அங்கிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ள சத்திரத்துக்கு சென்றால் வனப்பாதையின் நுழைவு பாதையை குறுகிய தூரத்தில் அடையலாம்.
இங்கிருந்து நடக்கத் தொடங்கினால் 12 கி.மீ. தூரத்தில் நிலக்கல், பம்பை செல்லாமல் நேரடியாக சந்நிதானத்தை அடைந்து 18-ம் படி வழியே தரிசனத்துக்குச் செல்லாம்.
பாரம்பரிய வனப்பாதையான எருமேலி மட்டுமல்லாது பம்பை செல்லும் வாகன பாதையையும் தேனி மாவட்டம் குறைவான தூரத்தில் இணைக்கிறது.
இவ்வளவு சிறப்பம்சம் இருந்தும், அரசியல்வாதிகளின் அழுத்தமின்மை, ரயில்வே அதிகாரிகளின் ஆர்வமின்மையால் ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்புகள் பறிபோய் கொண்டே இருக்கின்றன.
ஆகவே மண்டல, மகர விளக்கு சீசனுக்கு தேனி, போடிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். இதன்மூலம் ரயில்வேக்கும் வருவாய் அதிகரிப்பதுடன், பக்தர்களின் புனித யாத்திரையும் எளிதாக இருக்கும்” என்று அவர்கள் கூறினர்.
தண்டவாளம் இங்கே... ரயில்கள் எங்கே?
ரூ.593 கோடி மதிப்பீட்டில் மதுரை - போடிக்கு அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் அந்தளவுக்கு ரயில் இயக்கங்கள் இல்லை. மதுரை, சென்னைக்கு தலா ஒரு ரயில் மட்டுமே செல்கிறது. ரயிலை பகல் முழுவதும் நிறுத்தி வைக்கும் இடமாகவே போடி மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.