

சென்னை: இந்திய ரயில்வேயில் மொத்தப்பணியிடங்களில் இரண்டு விழுக்காடு பணியாளர்களை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், இத்தகைய ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொள்ளக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள பணியிடங்கள் 12 லட்சத்து 80 ஆயிரமாகும். இதில் இரண்டு விழுக்காடு பணியாளர்களை அதாவது 29 ஆயிரத்து 608 பணியாளர்களை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது மக்கள் நலனுக்கு எதிரானது. இத் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால், தெற்கு ரயில்வேயில் மட்டும் ஏறத்தாழ 2,000 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இது ரயில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். விபத்துகளை தடுக்க உதவாது.
இந்தியாவில் நாள் தோறும் 13 ஆயிரத்து 17 ரயில்கள் உட்பட தினசரி 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்கி, நிரந்தர அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக பணி குறைப்பு மேற்கொள்வது என்பது சரியல்ல.
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய ஒன்றிய பாஜக அரசு, தற்பொழுது ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதும், வேலை வாய்ப்புகளை ஒழித்துக் கட்டுவதும் அளித்த வாக்குறுதிக்கு நேர் எதிரானதாகும்.
இன்று இந்தியா எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினை வேலையில்லா திண்டாட்டமாகும். இது இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், விரக்தியையும், கோபத்தையும் உருவாக்கி உள்ளது .
வேலையில்லா திண்டாட்டத்தால், மது, போதைப் பழக்கம், கொலை, கொள்ளை, தற்கொலைகள், வன்முறைகள் உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகள் அதிகரித்துள்ளன.
வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதில் கவனம் செலுத்தாத ஒன்றிய பாஜக அரசு, ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது நாட்டின் இளைய தலைமுறையினரின் நலன்களுக்கும், அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கும் எதிரானதாகும்.
இந்த ஆட் குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடுவது மட்டுமல்லாமல், தற்காலிக அடிப்படையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்து ரயில்வே பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கி நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்திட வேண்டும். ரயில்வேயை படிப்படியாக தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.