

சிவகங்கை: முறையான உத்தரவு இல்லாததால், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் நகைக்கடன் உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கூட்டுறவுத் துறையில் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 22 மண்டல அலுவலகங்கள், 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் உள்ளன. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் வழங்கப்பட்டு வருகின்றன. தங்கம் விலை உயர்ந்ததால், தேசிய வங்கிகள். தனியார் வங்கிகள் நகைக்கடன் உச்சவரம்பை அதிகரித்தன. ஆனால். கூட்டுறவுத் துறையில் நகைக்கடன் உச்சவரம்பு அதி கரிக்கப்படாததால். வாடிக்கை யாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கடந்த வாரம் உச்சவரம்பை ஒரு கிராமுக்கு ரூ.10 ஆயிரமாக கூட்டுறவுத் துறை உயர்த்தியது. அதன்படி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் முறையான உத்தரவு வராததால், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் 22 மண்டல அலுவலகங்கள், 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் நகைக் கடன் உச்சவரம்பை உயர்த்த வில்லை.இதனால், புதிய நகைக்கடன் பெற விரும்புவோர். கடனை புதுப்பிக்க வேண்டிய வாடிக் கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் நகைக்கடன் உச்ச வரம்பை உயர்த்துவது குறித்து உத்தரவு பிறப்பித்துவிட்டனர். இதனால், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக் கடன் உச்ச வரம்பு உடனடியாக உயர்த்தப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி தலைமை அலுவலகம் சென் னையில் உள்ளது. அந்த வங்கி மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்தால்தான் அதன் மண்டல அலுவலகங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் நகைக்கடன் உச்ச வரம்பை உயர்த்த முடியும். இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் உத்தரவு வந்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.